அழிந்து வரும் கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்!
கடல் மீன்பிடி பிரச்சினைகள் மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பான செயற்திட்டங்களை கூற மட்டுமே எம்மால் முடியும், அவைகளை செயல்முறைப்படுத்த எம்மிடம் அதிகாரம் இல்லை என வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று வவுனியாவில் வடமாகாண கடற்தொழில் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே டெனீஸ்வரன் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடல் மீன்பிடி தொடர்பான அதிகாரம் மாகாணசபைகளுக்கு இன்மையால் அது தொடர்பில் எம்மால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதன் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது.
மேலும், மாகாணசபைக்கு கடல் மீன்பிடி தொடர்பான அதிகாரம் இல்லை. நன்னீர் மீன்பிடி தொடர்பான அதிகாரம் மட்டுமே உள்ளது.
அதற்காக எமது கடல்வளம் அழிவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எமது அடுத்த சந்ததிக்கு இந்த வளத்தை விட்டுச்செல்ல வேண்டும்.
தற்போது எமது வடபகுதி மீனவர்கள் மூன்று வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறார்கள்.
இந்திய மீனவர்களின் வருகைகள், அளவுக்கதிகமான தென்பகுதி மீனவர்களின் வருகை, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் என்பவையே இதற்கு காரணம், இது தொடர்பில் நாம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றோம்.
அவ்வப்போது ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்தின் அமைச்சர்களின் அனுமதி பெற்று தென்பகுதி மீனவர்கள் அளவுக்கதிகமாக வடபகுதிக்கு வருகின்றனர். இதனால் எமது பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் எமது கடல் வளம் அழிவடைகிறது.
இதனைப்போல எமது மீனவர்கள் தென்பகுதிக்கு சென்று இவ்வாறு மீன்பிடிக்க முடியுமா? எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய மீனவர்கள் இழுவை மடிப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் அவர்களது கடற்பரப்பின் சில பகுதிகளில் மீன்வளம் அழிவடைந்துள்ளது. தற்போது அவர்கள் எமது பகுதி நோக்கி வருகிறார்கள். இதனால் எமது மீனவர்கள் மட்டுமன்றி கடல்வளம் கூட வெகுவாக பாதிப்படைகிறது.
எதிர்காலத்தில் இந்த கடல்வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடமாகாணத்தில் மீன்பிடி அதிகார சபை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் எதிர்காலத்தில் எமது கடல்வளத்தை பாதுகாக்க முடியும்.
கடல் தொடர்பான பிரச்சினைகள், அதன் அபிவிருத்தி தொடர்பாக நாம் கூறினாலும் அதனை நடைமுறைப்படுத்த எம்மிடம் அதிகாரம் இல்லை. மத்திய அரசாங்கத்திடமே இதன் அதிகாரம் உள்ளது.
இதன் காரணமாக எமது கடல் வளத்தை நாம் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் மூலமே எமது வளத்தை நாம் பாதுகாக்க முடியும் எனவும் டெனீஸ்வரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அழிந்து வரும் கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்!
Reviewed by Author
on
July 17, 2016
Rating:

No comments:
Post a Comment