அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு நபர் சடலமாக ஒப்படைப்பு!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, யாழ்.வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக உறவினர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு, வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கந்தப்பு ஜெயபாலு (52 வயது) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவராவர்.
வவுனியாவுக்கு தொழில் நிமித்தம் சென்ற இவரை 08–10–2010 அன்று ஹெரோயின் விற்பனை மற்றும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் வைத்து இவர் விசாரணை செய்யப்பட்ட பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவர் மீதான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணைகள் பூர்த்தியடைந்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், கைதியின் மனைவி அங்கு சென்றிருந்தார்.
வவுனியா நீதிமன்றத்திற்குச் சென்றிருந்த கைதியின் மனைவி, அங்கு கணவர் ஆஜராக்கப்படாத நிலையில் அங்கிருந்து அனுராதபுரம் சிறைக்குச் சென்றிருந்தார்.
அங்கு அவர் கணவரைப்பற்றி விசாரித்த போது, அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என சிறைச்சாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணவரைப் பார்ப்பதற்காக மனைவி அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் சென்றபோது, கைதி மாரடைப்பால் மரணமானதாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக மனைவி அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த கணவரின் சடலத்தை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கைதியின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் இடம்பெற்றது.
அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு நபர் சடலமாக ஒப்படைப்பு!
Reviewed by Author
on
July 25, 2016
Rating:

No comments:
Post a Comment