தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் சாத்தியமாகுமா? தென்படும் சாதகமான காரணிகள்,,,,
நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொருத்தமான சூழல் கடந்த காலங்களில் பல்வேறு தடவைகள் கனிந்து வந்த போதும் அவற்றில் உரிய பலனைப் பெறமுடியாமல் போய்விட்டது.
இதனால் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது எப்போதுமே சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
மக்களின் நியாயமான அரசியல், அதிகார அபிலாஷைகள் நிறைவேற்றப்படாமல் அந்த மக்கள் அரசியல் அதிகாரமற்றவர்களாகவே காணப்படுகின்ற நிலைமை நீடிக்கின்றது.
தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் கடந்த காலங்களில் எந்தளவு தூரம் விட்டுக்கொடுப்புடனும் தூரநோக்குடனும் செயற்பட்ட போதும் தீர்வுத்திட்டமொன்றை தென்னிலங்கையிடம் பெற்றுக்கொள்வதானது சாத்தியமற்றதாகவே காணப்பட்டு வந்துள்ளது.
இந்த இடத்தில் சாத்தியமற்ற என்ற சொற்பிரயோகமானது பொருத்தமற்றதாக காணப்பட்ட போதிலும் யதார்த்தத்தில் அதுவே ஒரு பிரதான காரணியாக இருந்து வந்துள்ளது. இதனை யாரும் மறுக்கமுடியாது.
தீர்வுத்திட்டமானது சில சந்தர்ப்பங்களில் சாத்தியமாக தென்படுகின்ற போதிலும் இறுதியில் அது சாத்தியமற்றதாகவே போய்விடுகின்றது.
எனவே இந்த விடயத்தில் காணப்படும் துரதிர்ஷ்டமான நிலைமை அல்லது தீர்வை வழங்கக்கூடாது என்ற எண்ணங்கள் மாறவேண்டும்.
அந்தவகையில் கடந்த வருடம் ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சாதகமான போக்கில் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் கண்டுவிட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் மிகவும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செயற்படுவதை பல சந்தர்ப்பங்களில் காண முடிந்தது.
குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் தீர்வு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படுமென்றும் அனைத்துக் கட்சிகளுடனும் இணக்கப்பாடு எட்டப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் அடிக்கடி கூறி வருகிறார்.
அதுமட்டுமன்றி, இந்த விடயததில் அவர் ஆக்கபூர்வமான, சாதகமான அணுகுமுறையை முன்னெடுத்து செல்வதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் அர்ப்பணிப்பு மிக்கவராகவே பார்க்கப்படுகின்றார்.
அதாவது அதியுச்ச அதிகாரப்பகிர்வின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உறுதிசெய்யப்படக் கூடிய வகையில் தீர்வுத்திட்டம் அமைய வேண்டுமென்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மிகவும் உறுதியாகச் செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் இந்த அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தீவிர அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.
அதிகாரப்பகிர்வு என்ற விடயம் இன்று தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நானும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் இந்த அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தில் ஆரம்பத்திலிருந்து அக்கறை காட்டிவருகின்றோம்.
அதிகாரங்களானது சரியான வகையில் பகிரப்பட்டு இது சம்பந்தமான விடயங்கள் கையாளப்படவேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
மிகப்பெரிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது காணப்படுகின்றது.
அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது இன்று எமக்கு முன்னால் காணப்படுகின்ற பாரிய சவாலாகும்.
இவ்விடயத்தில் சகல கட்சிகளினதும் ஆதரவினையும் ஒத்துழைப்பையும் பெற்று புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துரைத்திருக்கிறார்.
அதிகாரப்பகிர்வு விடயத்தை தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படாத வகையிலும் எதிர்காலத்தில் குழப்ப நிலைமைகள் எதனையும் தோற்றுவிக்காத ரீதியிலும் கையாள வேண்டியுள்ளது.
மத்திய அரசுக்கும், மாகாணங்களுக்குமிடையிலான தொடர்புகள் பலப்படுத்தப்படும் வகையில் அதிகாரங்கள் சரியான முறையில் பகிரப்படவேண்டும். ஆனால், ஒரு சிலர் அதிகாரப்பகிர்வானது நாட்டைப் பிளவுபடுத்துமென்று கூறி வருகின்றனர்.
எனினும் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பொன்று ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகப் பயணிக்கக்கூடிய ஐக்கிய இலங்கைக்குள் சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஜனநாயக முறைமையை நாங்கள் ஏற்படுத்துவோம் எனவும் பிரதமர் கூறியிருக்கிறார்.
இந்த நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக நானும் ஜனாதிபதியும் எடுத்துள்ள தீர்மானம் நிச்சயம் பலன் தருவதாக அமையும். தேசிய அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தில் நாங்கள் தேசிய பிரச்சினைக்கு நிச்சயமாக தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இவ்வாறு பார்க்கும் போது பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதையும் இது தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை மிகவும் தூரநோக்குடனும் ஆழமான பார்வையுடனும் அவதானித்து வருவதையும் உணரமுடிகின்றது.
குறிப்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 1994ம் ஆண்டு முதல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலிருந்தே தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அக்கறைகாட்டியவர்.
அதுமட்டுமன்றி, கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் அமைத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காண்பதற்காக பாரிய முயற்சிகளை முன்னெடுத்தவர்.
அந்த செயற்பாட்டுக்காகவே 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தென்னிலங்கை மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்து ஆட்சியையும் இழந்தார். எனினும் அவர் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கான தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை.
தற்போது ஐக்கிய தேசியக்கட்சியானது ஒற்றையாட்சி முறைக்குள்ளேயே தீர்வுகாணப்படும் எனக் கூறிவந்தாலும், அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தில் பிரதமரும், ஐக்கிய தேசியக்கட்சியும் மிகவும் உறுதியாக இருக்கின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
அதுமட்டுமன்றி, அரசியலில் மிகவும் தீர்க்கமான தற்போதைய சூழலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன.
அதுமட்டுமன்றி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து அதிகாரப்பகிர்வு விடயத்தில் தீவிர அக்கறையுடன் செயற்படுவதாக பிரதமர் கூறியுள்ளமையானது அரசியல் தீர்வு விவகாரத்தில் நம்பிக்கையான மற்றும் சாதகமான காரணிகள் தென்படுவதை எடுத்துக்காட்டுகிறது.
அத்துடன் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இந்த தீர்வு விடயத்தில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
எனவே, இந்த நல்லவிதமான சூழலைப் பயன்படுத்தி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுவிட வேண்டியது அவசியமாகும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்த பாராளுமன்றத்திற்கு இந்த விவகாரத்தை மீதம் வைத்துவிடக்கூடாது.
எனவே, தற்போது செயற்படுவதைப் போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் மேலும் புரிந்துணர்வுடனும் தூரநோக்குடனும் செயற்பட்டு விரைவில் புரையோடிப் போயிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு முயற்சிக்கவேண்டும்.
இந்த விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் சுய அரசியல் நலனைக் கருத்தில் கொள்ளாது நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இதய சுத்தியுடன் தமது பங்களிப்பை செலுத்துவதற்கு முன்வரவேண்டும்.
தற்போது கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை நாடு இழக்குமானால் அது எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்கின்ற ஒரு சகவாழ்வு நிலையை இழந்து விடுவதற்கு சமனாகிவிடும்.
எனவே இந்த அனைத்து விடயங்களையும் உள்வாங்கி இரண்டு பிரதான கட்சிகளும் எதிர்க்கட்சியும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதுடன், அதற்கு ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினர் தமது ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் சாத்தியமாகுமா? தென்படும் சாதகமான காரணிகள்,,,,
Reviewed by Author
on
July 25, 2016
Rating:

No comments:
Post a Comment