மீனவர் பிரச்சினை தொடர்பாக முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!
நாட்டில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விசேட கலந்துரையாடல் கூட்டம் ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது,
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் நிகால் தலபதி, வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், மேல்மாகாண மீன்பிடி அமைச்சர், மீன்பிடி அமைச்சின் செயலாளர், கடற்படை அட்மிரல், கரையோர பாதுகாப்புப்படை அதிகாரிகள், NARA, NAQDA நிறுவனங்களின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் மீனவ சமூகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதானமாக இந்திய இழுவைப்படகுகளின் வருகை, அவற்றினால் எமது கடல்வளம் பாதிக்கப்படுதல், அதனால் இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டது.
குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி தொழில்களை இல்லாதொழித்தல், இலங்கையில் இழுவைப் படகு மீன்பிடியை தடைசெய்தல் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு விரைவில் அனுமதியளிக்கப்பட வேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
மேலும் மீனவர் பிரச்சினை தொடர்பாக நடைபெறவிருக்கும் இலங்கை, இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னர் நடைபெற்றது போன்று இல்லாமல் காலம்தாழ்த்தாது விரைவாக முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்றும், இவ்விவகாரம் இருநாட்டு விடயம் என்பதால் இராஜதந்திர ரீதியாகவே முடிவுகள் எடுக்க வேண்டுமென்ற கருத்தும் நிலவியது.
இதேவேளையில் மத்திய மீன்பிடி அமைச்சர் வடமாகாண மீனவ பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வடமாகாண மீன்பிடி அமைச்சரை பணித்துள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!
Reviewed by Author
on
August 05, 2016
Rating:

No comments:
Post a Comment