நாடு பிளவுபட ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை! எதிர்க்கட்சி தலைவர்....
அதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அனைவரும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடும் புரிந்துணர்வோடும் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் விவசாயம், கைத்தொழில் மற்றும் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்ததனால் இப்போது மீதமிருப்பது அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டுமே. தமிழ் தேசிய தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று உறுதிமொழி வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முப்படைகள், நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் மாகாண நிர்வாகத்தின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதனால் அடுத்து வரும் பத்து வருட காலத்திற்குள் இலங்கையை சிங்கபூர் போன்ற நாடாக மாற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நாடு பிளவுபட ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை! எதிர்க்கட்சி தலைவர்....
Reviewed by Author
on
August 29, 2016
Rating:

No comments:
Post a Comment