'மிடாஸைவிட தி.மு.க சரக்குகளுக்கே முக்கியத்துவம்! ' -கிறுகிறுக்க வைக்கும் புள்ளிவிபரம்
சட்டமன்றத்தில் மதுவிலக்குத் தொடர்பான விவாதங்கள் களைகட்டியுள்ளன. ' நாங்கள்தான் சாராயக் கடைகளைத் திறந்தோம் என்றாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் கருணாநிதி.
" மதுவிலக்கு, கச்சத்தீவு ஆகிய இரண்டு வார்த்தைகளைக் கூறினால் போதும், சபையில் இருந்து தி.மு.கவினர் வெளிநடப்பு செய்துவிடுவார்கள். இந்த வகையில் சபாநாயகரின் பணியை நான் எளிதாக்கி இருக்கிறேன்" என முதல்வர் ஜெயலலிதா பேச, எதிர்வாதம் செய்ய சபையில் தி.மு.கவினர் இல்லை. ' மதுவிலக்கை நீக்கி உத்தரவிட்டது கருணாநிதிதான்' என புள்ளிவிபரங்களோடு பேசினார் முதல்வர். இதற்கு புள்ளிவிபரம் மூலமே பதில் தி.மு.க தலைவர் கருணாநிதி.
அவருடைய அறிக்கையில், ' 1971-ம் ஆண்டு தி.மு.க அரசு சாராயக் கடைகளைத் திறந்தாலும், 74-ம் ஆண்டில் மீண்டும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தியது நாங்கள்தான். இதை முதல்வர் ஜெயலலிதா மறைத்துவிட்டார். அதன்பிறகு 81-ம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்தார் எம்.ஜி.ஆர். மதுவிலக்கில் உண்மையான அக்கறையுள்ளவர் போல காட்டிக் கொள்கிறார் ஜெயலலிதா. ஆனால், அவருடைய அ.தி.மு.க ஆட்சியில், 2013-14ம் ஆண்டில் எந்தெந்த மதுபான கம்பெனிகளிடம் இருந்து, எவ்வளவு தொகைக்கு அரசு நிறுவனத்தால் மது வாங்கப்பட்டது?' எனக் கேள்வி எழுப்பியவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களையும் தொகுத்திருந்தார்.
அதில், சிவா டிஸ்டில்லரி: ரூ.572 கோடி, கோல்டன் வாட்ஸ் லிமிடெட்: ரூ.583 கோடி, எலைட் டிஸ்டில்லரீஸ்: ரூ.659 கோடி, எம்.பி டிஸ்டில்லரீஸ்: ரூ.750 கோடி, இம்பீரியல் ஸ்பிரிட்: ரூ.874 கோடி, மேக்ரோ: ரூ.988 கோடி, எஸ்.என்.ஜே: ரூ.1,125 கோடி, மோகன் ப்ரூவரீஸ்: ரூ.1,171 கோடி, கால்ஸ் டிஸ்டில்லரீஸ்: ரூ.1,317 கோடி, யுனைடெட்: ரூ.1,557 கோடி, மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ்: ரூ.2,280 கோடி என பட்டியலிட்டவர், ' மற்ற நிறுவனங்களைவிட மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மட்டும் அதிகப்படியான மது பாட்டில்களை வாங்கியுள்ளது தெரிய வருகிறது.
மிடாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார்? மதுவிலக்கில் உண்மையான அக்கறையுள்ளவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அப்படி அக்கறை இருந்திருந்தால், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தியிருக்க வேண்டியதுதானே?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார் கருணாநிதி.
தி.மு.க தலைவரின் அறிக்கை குறித்து, நம்மிடம் பேசிய டாஸ்மாக் அதிகாரி ஒருவர், " மிடாஸிடம் இருந்து கூடுதல் சரக்கு வாங்கப்படுவது உண்மைதான். டே நைட், சீ பீரீஸ், ஓல்டு அட்மிரல் உள்ளிட்ட மிடாஸ் சரக்குகளை தேவையின் பொருட்டுக் கொள்முதல் செய்கிறோம். தினம் தோறும் தேவைப்படும் பட்டியலில் இந்த சரக்குகள் உள்ளன. இவை அதிகப்படியாக விற்பனை ஆகின்றன. அதேபோல், தி.மு.கவினர் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்தும் அதிகப்படியான சரக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
" ஒருகாலத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியாக விற்பனையான எம்.சி, நெப்போலியன் உள்ளிட்ட சரக்குகளை ஒழித்துக் கட்டிவிட்டனர். மிடாஸ் உள்ளிட்ட சில சரக்குகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பது போல செயற்கையான தோற்றத்தை உருவாக்கிவிட்டனர். தேவைப் பட்டியல் என்பதே மதுபான ஆலைகளின் விருப்பத்திற்காக அதிகாரிகளால் உருவாக்கப்படுவதுதான். அந்த வகையில் மிடாஸ் சரக்குகளே மதுக்கடைகளில் முன்னிலை வகிக்கின்றன" என்கிறார் டாஸ்மாக் கண்காணிப்பாளர் ஒருவர்.
'மிடாஸைவிட தி.மு.க சரக்குகளுக்கே முக்கியத்துவம்! ' -கிறுகிறுக்க வைக்கும் புள்ளிவிபரம்
Reviewed by NEWMANNAR
on
August 06, 2016
Rating:

No comments:
Post a Comment