"வளங்களை சூறையாடாத அபிவிருத்தியை வரவேற்போம்''
வடமாகாணத்தைத் தற்போதைய பலவீன நிலையில் இருந்து எழுப்பி மற்றையவர்களுக்கு ஈடாக நிமிர்த்தி வைப்பதே எமது குறிக்கோள் என அபிவிருத்தி தேவைகளை கணிக்கும் குழுவினரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்ட நிறுவனம் , அந்நிய வளத் திணைக்களம் மற்றும் சந்திரிகாவின் செயலணியின் செயலாளர் ஆகியோருடன் கொழும்பில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தித் தேவைகளின் கணிப்பு பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தமது கருத்துக்களை முன்வைக்கையில்
அபிவிருத்தி வேலைகளின் கருத்துக் கணிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தையும் எமது வடமாகாண சபையையும் உள்ளடக்கி கணிப்பைச் செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
எம்முடன் கலந்துறவாடாது இப்பேர்ப்பட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எம்மீது உங்கள் கருத்துக்களைத் திணிப்பதாக அமையும். இதனால்த்தான் எம்மக்களின் பிரதிநிதிகளையும் சேர்த்து இவ்வாய்வைக் கொண்டு நடத்துவது நன்மை பயக்கும்.
எமது மக்களின் நம்பிக்கையைப் பெற உங்கள் வினைத்திறனான செயற்பாடு உதவியளிக்கும்.
வேலையில்லாதோரின் விபரங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நீங்கள் உதவி செய்யலாம். மக்களின் ஆதார வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வழிவகுக்கலாம். நல்லெண்ணத்தை உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு உதவி புரியும். ஆகவே முன்னெச்சரிக்கையுடன் கணிப்பின் விரிவெல்லையை நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறான கணிப்பு தொடர்ந்திருக்கக் கூடிய அபிவிருத்தியை உறுதிப்படுத்த வேண்டும். பல்விதமான போரினால் உண்டாக்கப்பட்ட பௌதீக ரீதியான, மனோரீதியான பாதிப்புக்களை நீங்கள் கண்டறிய வேண்டும். அவற்றில் இருந்து எம்மக்களை காப்பாற்றி வழிநடத்தத் தேவையான செயற்திட்டங்களை வகுத்துக்கொடுக்க வேண்டும். இவற்றிற்கான அடிப்படை தரவுகள் சரியன முறையில் கண்டறியப்பட வேண்டும். புள்ளி விபரங்கள் பொய் விபரங்களாக அமையக் கூடாது. மக்களின் அடிமட்டத்தில் இருந்து உண்மையான தரவுகள் பெறப்பட வேண்டும்.
நிரந்தரமான சகலரையும் உள்ளடக்கி முன்னேறும் அபிவிருத்தியே எங்கள் எதிர்பார்ப்பு. எமது வளங்கள் சூறையாடப்படாமல் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சுற்றுலாத்துறையில் பிராந்திய ரீதியில் பெருந்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும். எமது வாழ்விடங்கள் விவசாயம், மீன்பிடி என்ற இருவித தொழில்களுடன் பாரம்பரியமாகப் பரீட்சயப்பட்ட பிராந்தியமாகும். அவற்றை மையமாக வைத்து கைத்தொழில்கள் நடாத்தப்பட வழிவகுக்க வேண்டும்.
சிறிய மத்திய தொழில் முயற்சிகளில் நாம் இறங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. பாரிய தொழிற்சாலைகள் பாரிய கட்டிடங்கள் ஆகியன எமது நில அமைப்புக்கும், கலாசார பின்புலத்திற்கும் ஒவ்வாதன என்பதே எமது கணிப்பு. அவை பற்றி ஆராயுங்கள். கூட்டுறவு அடிப்படையில் தொழில் முயற்சிகளும் கைத்தொழில்களும் நடப்பது உசிதம் என்றே நாம் நம்புகின்றோம்.
மேலும் எம் இளைய சமுதாயத்தின் திறன்களை அவதானிக்கும் போது தகவல் தொடர்பு சம்பந்தமான தொழில்கள், பொருளாதாரத் துறைசார்ந்த தொழில்கள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்தலை அவர்கள் வரவேற்பார்கள் என்று எண்ண இடமுண்டு.
எம்மைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தைத் தற்போதைய பலவீன நிலையில் இருந்து எழுப்பி மற்றையவர்களுக்கு ஈடாக நிமிர்த்தி வைப்பதே குறிக்கோள். அபிவிருத்திப் பணியில் எமது புலம்பெயர் மக்கள் பிரதானமான பங்கினை ஆற்ற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. தனியார் முதலீடுகளை நாம் வரவேற்கின்றோம். ஆனால் எம்மைப் பிடித்து விழுங்கும் நோக்குடன் எவரும் எம்மிடம் வருவதை நாம் வரவேற்க மாட்டோம். எம்மைத் தெற்கின் எடுபிடிகளாக மாற்றப் பார்ப்பதை நாம் வரவேற்க மாட்டோம்.
எமது அலுவலர்கள் பலர் மேலிடத்து ஆணைகளை நடைமுறைப்படுத்து பவர்களாகவே சென்ற முப்பது வருடங்களாக இயங்கி வந்துள்ளார்கள். புதிய ஜனநாயக சூழலில் தாமாகவே சிந்தித்துச் செயலாற்றும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்க நீங்கள் முன்வர வேண்டும்.
எமது இந்த தேவைகள் கணிப்பு திறம்பட நடந்தால் சர்வதேச பல்நிறுவன செயற்திட்டம் ஒரு வெற்றித் திட்டமாக அமையும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. எமது வடமாகாணத்தை உங்களது வெற்றியின் சின்னமாக நீங்கள் எடுத்துக் காட்டலாம். நாங்கள் உங்களுக்கு சகல உதவிகளையும் நல்க காத்து நிற்கின்றோம்.
ஜெனிவா ஒன்றிணைந்த பிரேரணையின் ஏற்பாடுகளையும் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுகின்றேன். போர்க்குற்ற விசாரணை முறையாக நடந்தேறினால்த்தான் சமூக நல்லிணக்கத்தை எங்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
அதிகாரப் பரவல் எமது மக்களுக்கு நன்மை பயப்பதாய் அமைய வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுத்தால்த்தான் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
"வளங்களை சூறையாடாத அபிவிருத்தியை வரவேற்போம்''
Reviewed by NEWMANNAR
on
August 24, 2016
Rating:

No comments:
Post a Comment