அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை சிவ பூமியை பாதுகாப்பது ஐந்து ஈஸ்வரங்கள் - சீ.வி.விக்னேஸ்வரன்

அகில இலங்கை இந்துமா மன்றத்தின் அனுசரணையில் கீரிமலை சிவபூமி மடத்தில் ஆடி அமாவாசை புண்ணிய தினத்தில் நீத்தார் நினைவு நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கீரிமலையில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

குரு ப்ரம்மா.. என்று கூறி தனது உரையை ஆரம்பித்த முதலமைச்சர்,

“இன்று ஒரு புண்ணிய தினம். இந்த ஆடி அமாவாசை தினத்தில் தந்தையர்களை இழந்தவர்களும், ஆண் உறவுகளை இழந்தவர்களும், தமது உறவுகளை நினைவுகூர்வதற்கும் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்குமாக விரதம் இருந்து வழிபாடுகளை இயற்றக்கூடிய ஒரு பொருத்தமான தினமாக இந்த ஆடி அமாவாசை தினம் தேர்ந்தெடுக்கப்பட்டு வழிபாட்டு நிகழ்வுகள் வருடா வருடம் இயற்றப்பட்டு வருகின்றன.

இலங்கையைப் பாதுகாக்கும் ஈஸ்வரங்கள் ஐந்து. நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பன. தொண்டீஸ்வரத்தில் விஷ்ணு DQNDRA என்ற இடத்தில் தற்போது வழிபடப்பட்டாலும் அங்கு பாரிய ஒரு லிங்கம் ஆழ் நிலத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அங்கிருந்த கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையில் உள்ள மேற்படி ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான எங்கள் நகுலேஸ்வரம் அதன் புனிதம் கெடாது பாதுகாக்கப்படவேண்டிய ஒரு சைவ சமய அடையாளச் சின்னமாகும். இத்தலத்தையும் இதனை சூழவுள்ள பகுதிகளையும் நாம் போற்றிப் பாதுகாப்பதற்கும் அதன் புனிதத்தை பேணுவதற்குந் தவறிய காரணத்தினாலேயே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இப்பகுதிக்கு பொது மக்கள் ஒருவரும் வரமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் ஒருசில புண்ணிய புருஷர்களின் வழிபாடுகளாலும் எதிர்பார்ப்பாலும் இன்று இப்பகுதிக்கு அடியவர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு பிரதேசமாக இது மாற்றப்பட்டிருக்கின்றது. எனவே இந்த புண்ணிய பூமியை அதன் புனிதம் குன்றிவிடாது பாதுகாக்க வேண்டியது எம் அனைவரதும் தார்மீகப் பொறுப்பாகும்.

இங்கு ஒரு மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்கு சினத்தை ஏற்படுத்துகின்றது.

இலங்கையின் மிகப் பிரபல்யமானதும் இயற்கை துறைமுகமுமாகிய மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தை தமது தேவைக்கும் இராணுவப் பயன்பாட்டிற்கும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் கபட நோக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களை வேறிடத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கும் அவர்களுக்கான வாழ்வாதார செயற்பாடான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்குப் பெயரளவில் ஒரு துறைமுகம் அமைத்துக் கொடுக்க வேண்டியுமே மத்திய அரசு எதுவித கலந்துரையாடல்களோ அல்லது சமூகம்சார் விழிப்புணர்வுகளோ அற்ற நிலையில் கீரிமலைப் பிரதேசத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்ற முயன்றுள்ளது.

இச்செயல் ஒட்டுமொத்த இந்துக்களையும் ஏன் ஏனைய மதத்தவர்களைக் கூட வெறுப்பூட்டக்கூடிய ஒரு செயற்பாடாக அமைந்திருப்பது இங்கு பேசற்பாலது.

கீரிமலைப் பிரதேசம் சித்தர்களும் ஆன்மீக வாதிகளும் சமயப் பெரியார்களும் வாழ்ந்த ஒரு பிரசித்தி பெற்ற இடம். இங்கு சிறாப்பர் மடம், வைத்திலிங்க மடம், கிருஷ்ணபிள்ளை மடம், குழந்தைவேல் மடம் எனக்கிட்டத்தட்ட பதினொரு மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இங்கே வருகை தரும் அடியவர்களுக்கும் இவ் ஆலயச் சூழலில் இருந்த சித்தர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் இந்து சமய பெரியோர்களுக்கும் ஏனையோர்களுக்கும் தாகசாந்தி, உணவு என்பவற்றை குறைவில்லாது வழங்கி உபசரித்தது மட்டுமன்றி, அந்த அடியவர்களின் அவர்களின் வழிபாடுகள் சிறப்புற நடைபெறுவதற்கும் உதவியாக இருந்தன.

கடந்த முப்பது ஆண்டு கால நீண்ட கொடிய யுத்தத்தின் விளைவாக இங்கிருந்த மடங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டதுடன் ஆலயங்களின் பெரும் பகுதியும் அழிவுற்ற நிலையில் இருந்து தற்போது அவை சிறிது சிறிதாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள அனைத்து மடங்களும் அழிவுற்ற நிலையில் இந்தப் பகுதிக்கு வருகின்ற அடியவர்கள் ஒரு தேநீர் அருந்துவதற்குக் கூட ஒரு இளைப்பாறு மடமோ அல்லது தேநீர்ச் சாலையோ இல்லாத நிலையில் மடம் ஒன்று அவசியம் என்பதை கருத்திற் கொண்டு கலாநிதி ஆறுதிருமுருகனும் இந்துமா மன்றமும் இணைந்து கொண்டு இவ் அழகிய மண்டத்தை அமைத்தது மட்டுமன்றி அதற்குச் 'சிவபூமி' என்ற அழகிய திருநாமத்தையும் இட்டுள்ளார்கள்.

ஆதிகாலத்தில் சிவதொண்டர்களைக் கூவி அழைத்து உணவு வழங்கி அதன் பின்னர் தாம் உணவு உட்கொள்ளுகின்ற வழக்கம் போல இங்கும் இந்த மண்டபத்தின் முன்வாயிலில் நின்று இவ் வழியில் போகின்ற வருகின்ற அனைவரையும் சாப்பாடு தயாராகிவிட்டது வந்து சாப்பிட்டுச் செல்லுங்கள் என வலிந்து அழைத்து அவர்களுக்குப் போசனம் வழங்கி களைப்பாறச் செய்து அனுப்புகின்ற உங்கள் வழக்கத்தைப் பார்க்கின்ற அனைவருக்கும் மயிர்க்கூச்செறியத் தான் செய்கின்றது.

தென்பகுதியில் இருந்து இங்கு வந்து செல்லும்பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்தவர்களும் ஏனையவர்களும் கூட இங்கு வருகை தந்து இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டு உணவருந்தி வாழ்த்திச் செல்வதாக அறிந்து கொண்டேன். கதிர்காமத்தில் அந்தக் காலத்தில் இராமகிருஷ்ண மடம் இயற்றிய அன்னதான சேவையை உங்கள் சேவை நினைவுறுத்துகின்றது.

மானிடப் பிறப்பின் முழுமையான பலனையும் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறான தெய்வீகக் காரியங்கள் சிறப்புற இயற்றப்படுவது வழிவழியாக வந்த எமது முன்னோர்கள் எமக்கு கற்றுத் தந்த பாடம். அந்த வகையில் சிவபூமியின் கைங்கரியமும் அளப்பரியது.

இந்த மண்டபத்தில் உணவு வழங்குவது மட்டுமன்றி ஓர் இரு நாட்கள் தங்கியிருந்து வழிபாடுகள் இயற்றுவதற்கும் ஏனைய சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் சுமார் பத்தொன்பது அறைகளுடன் அனைத்து வசதிகளுடனும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதாக அறிந்துகொண்டேன். இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் போற்றப்படவேண்டியது.

இந்த புண்ணிய தலத்தில் இன்று நடைபெறுகின்ற நீத்தார் நினைவு நிகழ்வுகளில் நினைவுகூரப்படுகின்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்தி பெற்று அமைதியுற எல்லாம் வல்ல நகுலேஸ்வரப் பெருமானை வணங்கி எனது சிற்றுரையை நிறைவு செய்கின்றேன்.” எனக் கூறினார்.

மேலும் இந்த நிகழ்வில், கலாநிதி ஆறுதிருமுருகன், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன், இந்துமா மன்ற உப தலைவர் சின்னத்துரை தனபாலா, மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிவ பூமியை பாதுகாப்பது ஐந்து ஈஸ்வரங்கள் - சீ.வி.விக்னேஸ்வரன் Reviewed by NEWMANNAR on August 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.