யாழ்.அரசாங்க அதிபரின் அறிக்கைக்கு முதலமைச்சரின் பதில் கடிதம்....
இராணுவத்தால் சுவீகரிக்கப்படவுள்ள இடம்பெயர்ந்த மக்களின் காணிகளுக்கு அனுகூலமான நட்டஈடு வழங்கப்படுவது தொடர்பாக யாழ்.அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விசனத்தை வெளியிட்டிருக்கின்றார்.
இராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறவைத்து தேவையான பொலிஸாரை பணிக்கமர்த்துமாறு கேட்டுவரும் நிலையில், எமது பகுதிகளில் எப்போதும் தாங்கள் நிலைகொண்டிருக்கப்போவதாக இராணுவத்தால் தீர்மானிக்க முடியாது என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக “இராணுவத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளுக்கான அனுகூலமான நட்டஈடு” என்ற தலைப்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகனுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர் ஒருவருக்கு தாங்கள் அனுப்பிய கடிதமொன்றை நான் பார்த்தேன். இத்தகைய இடம்பெயர்ந்தவர்களின் காணிகள் தொடர்பாக 3 வகைப்படுத்தி மேஜர் ஜெணீரல் மகேஷ் சேனநாயக்க குறிப்பொன்றை விடுத்திருந்தார்.
காணி உரித்தைக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக திரும்பிச் செல்வது ஒரு வகையாகும். சில காலத்திற்கு திரும்பிச் செல்வதற்கு காணிகளை உடையவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பது மற்றொரு வகையாகும். இராணுவத்தினால் எடுக்கப்படவுள்ள காணிகளுக்கு நட்டஈடு செலுத்தப்படுமென்பது 3ஆவது வகையாகும்.
அவர் கூறியுள்ளதை நீங்கள் செயற்படுத்துவீர்கள் என இந்தக் கடிதங்கள் மூலம் நான் நம்புகிறேன். இந்நிலையில் பின்வரும் விடயங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படவேண்டிய தேவையுள்ளது.
காணி, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகிய பொதுப் பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக வடமாகாண சபையுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. திரும்பக் கையளிப்பது அல்லது காணிகளையும் வீடுகளையும் வைத்திருப்பது மேலிருந்து கீழ்வரை ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக இருக்கமுடியாது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண சபை இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் எத்தகைய பரிந்துரைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பாக பூர்வாங்க ஆய்வு என்பவற்றை பரீட்சித்து கருத்துக்கு எடுத்துக் கொள்ளவேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
அவற்றுக்கும் மேலாக யுத்தகாலத்தில் நாங்கள் இப்போது இருக்கவில்லை. சிவில் நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மக்களுக்கு எது சிறப்பானது என்பதை மக்களும் சிவில் நிர்வாகமுமே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். வடமாகாண சபையுடன் கலந்தாலோசிக்காமல் பாதுகாப்பு அமைச்சினால் எந்தவொரு ஒருதலைப்பட்சமான தீர்மானங்களும் எடுக்கமுடியாது.
யாவற்றுக்கும் மேலாக எமது மக்களின் பாதுகாப்பு திரும்பிச் செல்வதற்கான உரிமை, அபிவிருத்திக்கான உரிமை, வாழ்வாதாரங்கள் (சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையில் இருந்துவரும் விதிமுறைகள், விழுமியங்கள்) என்பன தொடர்பாக நாங்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையில் யுத்தத்திற்கு LO பின்னர் இராணுவத்தால் பெருந்தொகை ஏக்கர் காணி வைத்திருக்கப்படுவதற்கான தேவை குறித்து கேள்வி எழுப்புவதற்கான உரிமையை நாங்கள் கொண்டிருக்கின்றோம். தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மனித பாதுகாப்பை சமப்படுத்துவதில் இத்தகைய பெருந்தொகை ஏக்கர் காணிகளின் தேவை குறித்து கேள்வி எழுப்புவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றோம்.
இராணுவ முகாம்கள் நிலை கொண்டிருப்பதற்கான மாற்றிடங்களை எம்மால் பரிந்துரைக்க முடியும். அவர்களின் சூழ்நிலையை தீர்மானிக்கும் போது நாம் நிபுணத்துவ ஆதாரத்தை ஏற்படுத்த முடியும். இராணுவத்தின் தெரிவானது முறையான இராணுவ பரிசீலனைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை நிரூபிக்கவும் இதற்கப்பாலான காரணங்கள் இருப்பது தொடர்பாகவும் நிரூபிப்பதற்கு நிபுணத்துவ ஆதாரத்தை எம்மால் கொண்டுவரமுடியும்.
இதேவேளை இந்த விவகாரங்கள் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அண்மைய விஜயத்தின் போது எழுப்பப்பட்டன. 2015செப்டம்பரில் ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானங்களுடன் தொடர்புபட்டதாக அவரின் அண்மைய விஜயம் அமைந்திருந்தது. இதில் பாதுகாப்புத் துறை மறுசீர்திருத்தங்கள் உள்ளடங்கியிருந்தன. யுத்தத்திலிருந்து சமாதான நிலை மாற்றத்திற்கான உதவியாக இராணுவத்தை குறைப்பதுடன் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகள் தொடர்புபட்டவையாக இருக்கின்றன.
எம்முடன் கலந்தாலோசிக்காமல் இடம்பெயர்ந்தோருக்கான தங்களின் கடிதங்கள் அமைந்திருக்கின்றன. இராணுவத்தை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு, எம்மை புறந்தள்ளுவதற்கு ஒத்ததாக இது அமைந்துள்ளது.
2017 இறுதியில் மட்டுமே குறிப்பிட்ட சில காணிகள் மீள வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது ஏன் என அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.
தமது முகாம் அமைந்திருப்பதற்கு அதிகபட்சம் 1000 ஏக்கர்கள் தமக்கு தேவைப்படுவதாக மேஜர் ஜெனரல் மகேஷ் என்னிடம் கூறியுள்ளார். அவ்வாறானால் 3,500 ஏக்கர் உடனடியாக மீள வழங்கமுடியும். திரும்ப வழங்க முடியாததற்கான காரணிகள் தெரிவிக்கப்படவில்லை. சமாதான காலத்தில் இராணுவம் நிலைகொண்டிருப்பதற்கு 1000 ஏக்கர் காணி தேவைப்படுகின்றது என்பதை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் 100 ஏக்கர் காணிகளை வைத்திருப்பது பற்றித் தீர்மானிப்பதற்குக் கூட நினைத்தால் முதலாவது மற்றும் 2 ஆவது விடயங்களில் எழுப்பப்பட்டிருக்கும் கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வு மதிப்பீடு என்பன தேவைப்படுகின்றன.
மேலும் எப்போதுமே எமது பகுதிகளில் தாங்கள் நிலைகொண்டிருக்கப் போவதாக இராணுவத்தால் தீர்மானிக்க முடியாது. முழுமையாக இராணுவத்தை வாபஸ் பெற்று போதியளவு பொலிஸ் படையினரை அந்த இடத்திற்கு நியமிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இந்த விடயங்கள் யாவற்றையும் பரிசீலனைக்கு எடுக்காமல் எமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாக இந்த மாதிரியான கடிதங்கள் காணப்படுகின்றன. அனுகூலமான இழப்பீடானது பொருத்தமானதாக தென்படவில்லை. நல்லாட்சி மற்றும் மனிதாபிமான பரிசீலனைகளின் அடிப்படை கொண்டவையாகவும் பொருத்தமானவையாகவும் தோன்றவில்லை.
பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் மற்றும் தங்களின் திணைக்களத்துடன் தாமதமின்றி இந்த விடயங்களை ஆராய்வதற்கு அவசர சந்திப்பொன்றுக்கு தாங்கள் அழைப்புவிடுத்தால் தங்களுக்கு நன்றியுள்ளவனாவேன்.
அதேவேளை, இடம் பெயர்ந்தவர்களின் நலன்களை ஆபத்துக்குள்ளாக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் எடுப்பதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ். அரச அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தளபதி, பிரதமரின் செயலாளர், வடமாகாண ஆளுநர் , சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனரமைப்பு, இந்து விவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
யாழ்.அரசாங்க அதிபரின் அறிக்கைக்கு முதலமைச்சரின் பதில் கடிதம்....
Reviewed by Author
on
September 07, 2016
Rating:

No comments:
Post a Comment