வெள்ளி விழா கண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார்.....
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அந்தோனி விகரர் சோசை அடிகளார் குருத்துவ வாழ்வில் 25 வருடங்களை நிறைவு செய்ததை முன்னிட்டு வெள்ளி விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரின் சொந்த கிராமமான வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இடம்பெற்றபோது அவருடன் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட குருக்களுடன் இணைந்து நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்காக அழைத்து வரப்படுவதையும் மக்கள் மத்தியில் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதினரையும் படங்களில் காணலாம்.
வங்காலையை பிறப்பிடமாகக் கொண்ட விழா நாயகனான அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திரு திருமதி அந்தோனி சோசை செபஸ்ரியன் என்கிராசிற்றாள் ஆகியோரின் மகனாவார்.
இவரின் குருத்துவ பயணத்தில் 08.10.1983 அன்று யாழ். புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் நுழைந்து மெய்யியல் கல்வியையும் இறையியல் கல்வியையும் பயின்று 06.02.1991 அன்று மன்னார் மடுத்திருப்பதியில் தியாக்கோனாக திருநிலைப்படுத்தப்பட்டபின் 18.09.1991 அன்று அன்றைய மன்னார் மறைமாவட்ட ஆயராக இருந்த மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவர் முருங்கன், மன்னார், உயிலங்குளம் ஆகிய பங்கு தளங்களில் உதவி பங்குத்தந்தையாகவும், பங்கு தந்தையாகவும் கடமை புரிந்ததுடன் 28.08.1998 முதல் 31.07.2000 வரை உரோமில் உயர் கல்வி கற்றதுடன் 2000ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை மன்னார் மறைமாவட்டத்தின் பொதநிலையினரின் குடும்பநலப் பணியகத்தின் இயக்குனராகவும் கடமைபுரிந்ததைத் தொடர்ந்து 19.08.2000 லிருந்து தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வராக செயல்பட்டு வருகின்றார்
யுத்த சூழ்நிலை மன்னார் மாவட்டத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகைக்கு பக்க துணையாக இருந்து செயல்பட்டவர் என்பது கண்கூடு. அதுமட்டுமல்ல அக்காலக்கட்டத்தில் குடும்பநலப் பணியகத்தின் இயக்குனராக இருந்த வேளையில் பேசாலையில் கிறிஸ்துவுக்காக பத்து குடும்பங்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதம் ஒருமுறை அப்பகுதிக்கு சென்று தவறாது குடும்பங்களை ஒன்றுக்கூட்டி செபிப்பது மட்டுமல்ல துன்ப சூழ்நிலையிலும் ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இராவுணவு பரிமாரல் குடும்பங்களின் கஷ்டம் நஷ்டங்களை கேட்டறியும் நிகழ்வுகளையும் ஏற்படுத்தி துன்பங்களிலும் இன்பம் பெற வழிசமைத்தார் என்பது இங்கு நினைவு கொள்வது சாலச்சிறந்ததாகும்.
தொடர்ந்தும் நல்ல ஆயனாக இருந்து செயல்பட இறை செபத்துடன் வாழ்க வளமுடன் என பலரும் வாழ்த்திநிற்கின்றோம்.
வெள்ளி விழா கண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார்.....
Reviewed by Author
on
September 21, 2016
Rating:

No comments:
Post a Comment