இன்றைய கேள்வி பதில்-21.09.2016
கேள்வி:−
மரியாதைக்குரிய சட்டத்தரணி சுதன் அண்ணா.நான் தங்களின் தீவிர ரசிகை. உங்களுடைய பதில்களை படிப்பதற்காகவே facebook பயன்படுத்துகிறேன். உங்களுடைய பதில் ரொம்ப ரொம்ப சுப்பர் அண்ணா! உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அண்ணா! நான் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கிறேன். அண்ணா! உங்கள் அனுபவத்தில் பேய்கள் சார் வழக்கு ஏதேனும் Deal பண்ணியிருக்கீங்களா? அந்த அனுபவத்தினை கூற முடியுமா?
பதில்:−
அன்புத் தங்கையே! பேய்களையோ, அமானுஷ்யங்களையோ நான் நம்புவதில்லை. அறிவியலும் அதனை நம்புவதில்லை. சட்டத்திற்கான குற்றவாளி உருவமில்லாத அமானுஷ்யத்தினை சட்டம் ஏற்பதில்லை. காரணம் சட்டம். உண்மையானது. உயிருள்ளது. உயிருள்ள சட்டம் உயிரற்றவற்றை குற்றவாளியாக்குவதில்லை. அதனால ஒரு குற்றச் செயல்களுக்கு பேய், பிசாசு, பின்னி, சூணியம். போன்றவற்றை சட்டம் ஏற்பதில்லை.
சகோதரியே தாங்கள் எதனை எதிர் பார்த்து இக் கேள்வியினை கேட்டுள்ளீர்கள் என்பதனை அறிய முடிகிறது. எனவே தங்களுடைய மனதிற்கு திருப்தியான பதிலினை அளிப்பதே எனது கடைமை. எனவே பேய் தொடர்பாக நான் கற்ற வழக்கினை குறிப்பிடுகிறேன்.
பேய்கள் இல்லை என்று பலர் கூறினாலும் அது இருப்பதனை ஆய்வு செய்து, அதற்கான ஆவணங்களை உருவாக்கிய ஒரே விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுபவர் ஹான்ஸ் பெண்டர் (Hans Bender) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 5-2-1907 மறைவு 7-5-1991). இவர் ஆராய்ந்த பேய் வழக்குகளில் உலகப் புகழ் பெற்ற ஒரு வழக்குதான் "ரோஸென்ஹெய்ம் என்ற வழக்கு.
பவேரியாவின் தெற்குப் பகுதியில் "ரோஸென்ஹெய்ம்"என்ற நகரில் சிக்மண்ட் ஆடம் என்ற ஒரு வழக்கறிஞர் இருந்தார். அவர் அலுவலகத்தில் 1967ஆம் ஆண்டு திடீரென்று அமானுஷ்யமான பல காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. அரண்டு போன அவர் விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டரை நாடினார்.
அலுவலகம் வந்த பெண்டர் "என்ன நடக்கிறது" என்று கேட்டார். அந்த அலுவலகத்தில் நான்கு தொலைபேசிகள் உண்டு.திடீர் திடீரென போன் அழைப்புகள் ஒலிக்கும். ஆனால் போனை எடுத்தால் மறுமுனையில் பதிலே வராது. போனில் ஏதோ பழுது இருக்கிறதென்று நினைத்து ஆடம் எல்லா போன்களையும் புதிதாக மாற்றினார். ஆனால் மர்மமான போன் அழைப்புகள் தொடர்ந்தன. உடனே டெலிபோன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அங்கிருந்த தொலை தொடர்பு தொழில் நுட்பவியலாளர்கள் வந்து எல்லா வயர்களையும் ஆராய்ந்து அனைத்தும் சரியாகவே இருக்கின்றன என்று உறுதிபடத் தெரிவித்தனர்.
ஜெர்மனியில் 0119 என்ற நம்பர் அனைத்து அழைப்புகளையும் "துல்லியமாகக் குறித்து எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்". இதை டாக்கிங் க்ளாக் (TALING CLOCK) என்று அழைப்பர்.
இந்த பேச்சைக் குறிக்கும் கடிகாரத்தின் படி ஆடம்ஸுக்கு பில் அனுப்பப்பட்டது. அவர் அரண்டு போனார். அதாவது ஒரு நிமிடத்திற்கு அவர் 6 அழைப்புக்களைப் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டது! யாராலும் செய்ய முடியாத ஒரு அரிய காரியம் இது! ஒரு எண்ணை டயல் செய்து அடுத்தவர் மறுமுனையில் எடுக்கும் காலத்தைச் சற்று கவனித்தாலே நிமிடத்திற்கு ஆறு அழைப்புக்களை யாராலும் பேச முடியாது.
1967 அக்டோபரில் கட்டிடத்தில் உள்ள பல்புகளும் பல்புகள் பொருத்தப்பட்டிருந்த அலங்காரக் கூடுகளும் ஆட ஆரம்பித்தன. திடீரென 90 டிகிரிகள் அவை திரும்பும்! உடனே மீண்டும் மின் இணைப்பு சரி பார்க்கப்பட்டது. ஒரு வோல்டேஜ் மீட்டரும் புதிதாக பொருத்தப்பட்டது. பெரிய அளவிலான வோல்டேஜ் மாறுதல்கள் ப்யூஸை போக்கி விடும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை. அங்கிருந்த போட்டோகொப்பி மெஷினிலிருந்து மின்சாரம் கசிய ஆரம்பிக்கவே மின் இணைப்பையே துண்டித்து விட்டு ஜெனரேட்டர் மூலமாக மின் சக்தி பெறப்பட்டது. ஆனால் அப்போதும் இவை தொடர்ந்தன.
அனைத்தும் விசித்திரமாக இருந்தன. இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெண்டர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவை நிகழ்வதை அவரது குறிப்பேடுகள் சுட்டிக் காட்டின. தற்செயல் ஒற்றுமை போல ஆன்னி மேரி என்ற இளம் பெண் அங்கிருக்கும் போது மட்டுமே இவை நிகழ்ந்தன.
அவள் உள்ளே வந்தவுடன் இந்த அமானுஷ்ய செயல்கள் ஆரம்பிக்கும். அவள் வெளியில் சென்ற பின்னர் இவையும் நின்று விடும். ஆன்னியை விசாரிக்க ஆரம்பித்தார் பெண்டர். அவள் ஒரு உணர்ச்சிகரமான பெண் என்பதையும் தனது எஜமானனைக் கண்டால் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதையும் அறிந்தார் பெண்டர்.
1967 டிசம்பர் மற்றும் 1968 ஜனவரியில் இந்த அமானுஷ்ய செயல்கள் தீவிரமாக அதிகரித்தன. சுவரில் தொங்கும் கலண்டரின் பக்கங்கள் தாமாக கிழிந்து விழுந்தன. சுவரிலே தொங்கும் வண்ண ஓவியங்கள் தாமாகவே திரும்பிக் கொண்டன. 500 கிலோ எடையுள்ள ஓக் மரத்திலான ஒரு அலுமாரி – சாதாரணமாக யாராலும் அசைக்கக் கூட முடியாதது – சில அடிகள் தானாகவே நகர்ந்தது. ஆனால் கீழே பொருத்தப்பட்டிருந்த லினோலியம் சேதமடையாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது. மேஜை கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. பின்னர் "டப்பென்று" சத்தத்துடன் மூடிக் கொண்டன!
இதெயெல்லாம் படமாகவும் பிடித்தார் பெண்டர். அன்னிமேரி அந்த வேலையிலிருந்து நின்றவுடன் அனைத்து அமானுஷ்ய செயல்களும் நின்றன! தான் சேகரித்த ஏராளமான ஆவணங்கள் மூலமாக இந்த அமானுஷ்ய செயல்கள் அனைத்தும் மர்மமான ஒரு ஆவியின் வேலை தான் என்று பெண்டர் கூறினார். அன்னி மேரியின் வெறுப்பும் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும் அவர் இருக்கும் போது அவர் மூலமாக இந்த சக்திகள் தூண்டப்பட்டன என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கைப் போல அறிவியல் ரீதியிலான ஆவணங்களுடன் கூடிய கேஸ் வேறொன்றும் இல்லை என்ற புகழுடன் படமாக பிடிக்கப்பட்ட வழக்கும் இது தான் என்பதும் ஹான்ஸ் பெண்டருக்கு புகழை அள்ளித் தந்தது.
இவ்வாறு இவரது ஆய்வின்படி முடிவு கூறப்பட்டாலும் சட்டம் அதனை நம்பவோ,ஏற்றுக் கொள்ளவோ இல்லை. பின் இந்த வழங்கு தற்போதுவரை நிலுவையிலுள்ளது. வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் உயிருடனும் இல்லை. எனவே பேய் சார்ந்த எந்த வழக்குகளும் நீதீமன்றத்தை சென்றடைவதில்லை. ஒருவேளை விடை தெரியாத வழக்குகள் பேய் சாயல் பூசப்பட்டால் அதற்கான தீர்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. தள்ளிபடி செய்யப்படும் அல்லது அதற்கான ஆதாரம் ஆராயப்படும் வரை கிடப்பில் போடப்படும்.
இன்றைய கேள்வி பதில்-21.09.2016
Reviewed by NEWMANNAR
on
September 21, 2016
Rating:

No comments:
Post a Comment