அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் -14.09.2016

கேள்வி:−

கெளரவ சட்டத்தரணி சுதன் sir! நான் சென்னையிலிருந்து அன்புச் செல்வி. sir எனக்கு 12 வயதிருக்கும் போது என் குடும்பத்தார் என் தாய் மாமாவிற்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். எனக்கும் மாமாவுக்கும் 14வயது வித்தியாசம். எனினும் என்னுடைய அனைத்து தேவைகளையும் என் மாமா ஒரு அப்பா ஸ்தானத்திலிருந்து செய்ததால் அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவர்மீது ஒரு மகளுக்குரிய மரியாதையையும் பாசத்தையுமே செலுத்தினேன். அவர்மீது எந்தவித உடல் ரீதியான ஈர்ப்பும் ஏற்படவில்லை. இதனை நான் மாமாவிடமே கூறிவிட்டேன். முதலில் அதிர்ச்சி அடைந்த மாமா பிறகு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். எனக்கும் மாமாவிற்கும் சரிப்பட்டு வரவில்லை என்ற விஷயம் அம்மாவிற்கு தெரிந்து மிகவும் கோபித்துக் கொண்டார். இதேவேளை வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி வேலை பார்க்க வந்தேன். இந்த சூழலில் எனக்கு ஒரு புது நட்பு ஏற்பட்டது.

 என் மாமாவைப் பார்த்து வராத உணர்வு, உடல் ஈர்ப்பு, இந்த புது நண்பரிடம் ஏற்பட்டது. காதலித்தோம். சமீபத்தில் ஒரே ப்ளாட்டில் குடியேறி உள்ளோம். அவருக்கு என்னை விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால், நான் மாற்றான் மனைவி என்பது அவருக்கு தெரியாது. நானும் கூறவில்லை. எப்படி என் கடந்த கால வாழ்க்கை பற்றி கூறுவேன்? மிகவும் குழப்பமாக இருக்கிறது. என்ன சட்டச் சிக்கல் வரும் என்பது புரியவில்லை. நான் மைனராக இருந்தபோது நடந்த முதல் திருமணம் செல்லுமா? அது சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை. மேலும்,எங்கள் வீட்டு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற பலவற்றில் என் மாமாதான் என் கணவர் என்று இருக்கும். ஆனால், நான் வேலைக்கு சேரும் பொழுது திருமணமான பெண் போல நான் படிவத்தில் குறிப்பிடவில்லை. ஒரு வேளை என்னவருக்கு என்னைப் பற்றி தெரிந்தால் என்னை வெறுத்துவிடுவாரோ என்று மிகவும் பயமாக உள்ளது? எனக்கு சரியான பதிலினை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


பதில்:− 

அன்பான சகோதரரியே!வயது ஒரு பிரச்சனையில்லை.ஆனால் தங்களின் மனதின் உருவமைப்பு தந்தையாக உங்கள் மாமாவை நினைத்துள்ளமையால் அது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.எனினும் முதலில் நீங்கள் முன்பு செய்த தவறையே தற்போதும் செய்துள்ளீர்கள். அறியாப் பருவத்தில் திருமணம் பண்ணினாலும், அதனை சட்டப்படி செல்லுபடியாக்காது மற்றுமொருவருடன் வாழ்வது சட்டப்படி குற்றமாகும். அத்துடன் தங்கள் காதலனிடம் திருமணம் பற்றிய விடயத்தினையே மறைத்துள்ளீர்கள். அது பாரிய தவறாகும். தங்களுடைய சிறு வயது திருமணத்தினை பற்றி அவரிடம் கூறி,கருத்தொருமித்த பின்பே பிளாட்டில் குடியேறியிருக்க வேண்டும்.

பொதுவாக நமது நாட்டில் சட்டப்படி மணமகளுக்கு திருமணத்திற்கு தகுதியான "வயது−18"என இருப்பினும் அந்த வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் திருமணம் "செல்லா திருமணம் என சட்டம் கூறுவதில்லை". இது மிக முக்கியமான சட்ட வாதமாகும்.18வயது முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் திருமணத்தை சட்டப்படி இரத்து செய்ய கோரும் பட்சத்திலேயே அந்தத் திருமணம் இரத்து செய்யப்படும்.மேலும், உங்கள் திருமணத்தின் போது உங்கள் படிப்பு தடைசெய்யப்படாத காரணத்தாலும், திருமண உறவை புரிந்து கொள்ள முடியாத காரணத்தினாலும் உங்களுக்கு நடந்த பொம்மை கல்யாணத்தை நீங்கள் மறுக்காத காரணத்தால் இன்று சமுதாயத்தின் பார்வையில் அதை உண்மைக் கல்யாணம் ஆக்கிவிட்டீர்கள்.
உங்கள் திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும் உங்களின் செய்கை திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக அறியப்பட்டுள்ளது. அதற்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை சான்றாக உள்ளது. அதனால் உங்கள் திருமணம் சட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடிய திருமணமாக இருக்கிறது. ஒருவரின் சட்டம் "ஏற்றுக் கொள்ளக் கூடிய திருமணம் நிலுவையில் இருக்கும் பட்சத்தில்,வேறு ஒரு திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்".
சற்று நிதானமாக சிந்தியுங்கள். உங்கள் புது நண்பரிடம் உங்கள் உண்மை நிலையை எடுத்துக் கூறுங்கள். உங்களை உண்மையாக நேசிப்பவராயின் உண்மையை புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புண்டு. அடுத்ததாக உங்கள் உண்மை நிலையை உங்கள் மாமாவிடம் எடுத்துக் கூறும் பட்சத்தில் மாற்றான் மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதற்காக இந்தியன் பீனல் கோர்ட் பிரிவு 497ன் கீழ் உங்கள் புது நண்பர் மீது உங்கள் மாமா புகார் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

அதனால் உங்கள் மாமாவிடம் உங்கள் திருமண பந்தம் தொடர்வதால் யாருக்கும் பயன் இல்லை என்று புரியவைத்து, மனமொத்த விவாகரத்து பெற இயலுமா என்று முயற்சி செய்யுங்கள். சம்மதிக்கவில்லை என்றால் சட்டப்படி நீங்கள் அவர்மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். முதலில் உங்கள் முதல் திருமணத்தை சட்டப்படி இரத்து செய்த பின்பே இரண்டாவது திருமணத்தைப் பற்றி சிந்திப்பது நலம்.

அன்பான சகோதரிகளே! உங்களுக்கு நான் கூறுக் கொள்ளும் அறிவுரை" திருமணமானால் வேறு ஆண்களுடன் காதலோ,கலியாணமோ பண்ணும் போது முதல் திருமணத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறுங்கள். அதன் பின்பே உங்களுடைய மனதார மணத்திற்கு முயற்சியுங்கள். காரணம் திருமண விவாகரத்து பெறாது,பிற ஆண்களுடன் பழகும் போது அந்த உறவு சட்ட ரீதியில் தவறானதாகும். இதனை சாட்டாக வைத்து பிற ஆண்கள் உங்களிடமிருந்து அடைய வேண்டியவற்றை அடைந்து கொண்டு,விலகி விடுவார்கள். இழப்பு உங்களுக்குதான். இதனால் இருவரையும் இழந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனையே நான் தொழில் சார் அனுபவத்தினுடாக காண்கின்றோம். எனவே முதல் திருமணம் சட்டப்படி இரத்து ஆகாமல் வேறு உறவு நிலைக்கு முயற்சிப்பதானது தங்களுக்கு மட்டுமே இழப்பாக அமையும்.


இன்றைய கேள்வி பதில் -14.09.2016 Reviewed by NEWMANNAR on September 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.