இன்றைய கேள்வி பதில் -28.09.2014
கேள்வி:−
வணக்கம் சுதன் அண்ணா! எனக்கு எப்படி கேள்வி கேட்பது என்று கூட தெரியாது அண்ணா! உங்கள் பதில்கள் அனைத்தையும் "மிகவும் விரும்பி" பார்ப்பேன் அண்ணா! எனக்கு உங்களை நிறைய பிடிக்கும். அண்ணா! தற்போது நான் தாங்க முடியாத கவலையிலிருக்கிறேன். அண்ணா! என் பிரச்சனையை உங்களிடம் கூறினால்தான் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புறேன் அண்ணா! என்னை யார் என்று காண்பிக்காதீங்கள்.அண்ணா! எனக்கு கூடப் பிறந்த அண்ணா ஒருவர் மட்டுமே உள்ளார்.அவர் 42வயதை உடைய ஒரு அம்மாவை விரும்புகிறார்.அண்ணாவுக்கு வயது 20 தன்னை விட 22வயது அதிகமானவளை காதலிக்கிறார். அந்த அம்மாவைத்தான் திருமணம் பண்ண இருக்கிறார். அந்த அம்மாவுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.இதெல்லாம்தெரிந்தும் அந்த அம்மாவையே திருமணம் பண்ண இருக்கிறார். அதனை அங்கீகரிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெற்றோரை மிரட்டுகிறார்.அவர் திருமணம் பண்ணினால் நாங்கள் அவமானத்தால் சாகுவோம் அண்ணா!. என் அண்ணாவிற்கு எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைப்பது என்று புரியாத நிலையில் பெற்றோர் தவிக்கிறார்கள். இதற்கு என்ன வழி அண்ணா? நல்ல பதில் தாருங்கள் அண்ணா!
பதில்:−
என் அன்பு தங்கையே! திருமணமாகும் தம்பதியினரிடையே அதிக பட்சமாக 15வயது இடைவெளிக்கு அதிகமான வயதினர் திருமணம் முடிப்பது இல்லறத்திற்கு எந்த வகையிலும் சாத்தியமாகாது. அதிக வயது இடைவெளியானவர்கள் திருமணம் பண்ணுவது உடல் ரீதியிலும் பாதிப்பாகும். அத்துடன் மனப் பொருத்தத்திலும் ஒத்துப் போவதில்லை. பொதுவாகவே 40 வயதை தாண்டும் வயதில் பெண்கள் அழகு/ஆசையுடனே காணப்படுவார்கள். கையருகே காட்சி தரும் நிலாவை எட்டிப்பிடித்து விடும் குழந்தையின் மனநிலையில் தான் உங்கள் அண்ணா இருக்கிறார். தற்போது உங்கள் அண்ணாவிற்கு"தான் அந்த மாது மீது வைத்துள்ள பாசம் காதலல்ல.அது ஒருவகை மோகமாகும்"என்ற உண்மை புரியவில்லை.
பொதுவாக இளம் வயதினர் வயது அதிகமானவர் மீதே அதிகம் நாட்டம் காட்டுகின்றனர்.(இது இரு பாலாருக்குப் பொருந்தும்)இது ஒருவகை உளவியல் மாற்றமே!.ஆனால் இது பொருந்தாக் காதல். முறைகேடான காதல். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போடுகிற காதல்.
தற்போது உங்கள் அண்ணாவிற்கு அந்த மாது மீதுள்ள ஈர்ப்பானது நீடிப்பதற்கான வாய்ப்பில்லை. அவர் அவ் மாதுவிடம் எதிர் பார்க்கும் ஆசை அல்லது எதிர் பார்ப்பு விரைவில் அடைந்து கொள்ளப்படும்.அது அடைந்து கொள்ளப்பட்டவுடன் உங்கள் அண்ணா தானாக தன் தவறை உணர்ந்து திருந்தி வரலாம். அதற்கிடையில் அவர் திருமணம் என்ற வேலிக்குள் செல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
சகோதரியே! என் பார்வை எப்போதுமே நடுநிலையானது.எனவே அந்த மாது மீதும் கருணை காட்டுகிறேன்.அந்த மாதுவின் பக்கத்தில் தவறு இருப்பதைப் போன்று தங்கள் அண்ணா மீதும் தவறுள்ளது.தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான். தாய்க்கு சமமான மாதுவோடு உறவு கொண்டது ஜீரணிக்க முடியாத குற்றமாகும்.எனினும் பாவமறியாத உங்கள் மனசு ஆறுதலடைய வேண்டும்.அதற்கான வழிகளை கூறுகிறேன்.
இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்கள் காதலை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திலேயே இருக்கிறார்கள். அதற்காக எதிர்காலமே அஸ்தமித்து போகச்செய்யும் காதலை எதிர்ப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? தூய்மையான காதலை பிரிக்கக்கூடாது தான். ஆனால் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்ளும் பொய் புரட்டலான காதலுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது? இதை எப்படி ஆதரிக்க முடியும்? நம் நாட்டை பொறுத்தவரை காதல் என்பது திருமணத்தில் முடிவதே காதலின் வெற்றியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் எதிர்காலம், சமூக அந்தஸ்து, பெண்ணின் பாதுகாப்பு இவை அனைத்தும் பரிசீலிக்கப்படுகிறது. காதல் என்பது வாழ்க்கையின் அடுத்த பகுதியாக மாறிவிட்டபடியால் அதில் எந்த கண் மூடித்தனமும் இருக்கக்கூடாது. அது உடன் இருக்கும் மற்றவர்களையும் பாதிக்கும்.
காதல் என்பது மனதின் நெகிழ்ச்சி,உள்ளத்தின் மலர்ச்சி, பருவக்கிளர்ச்சி என்றெல்லாம் வைத்துக்கொண்டால் கூட அது ஒருவரின் வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. காதல் வாழ்வின் ஆரம்பமே தவறாகி விடக்கூடாது. அது தவறான முடிவிற்கு வித்தாகி விடும்.
மேலை நாடுகளில் காதல் என்பது பல பரிமாணங்களில் காணப்படுகிறது. இருவர் சேர்ந்து வாழ மட்டுமே அங்கே காதல் அவசியப்படுகிறது. எதிர்கால கொள்கையை மேலை நாட்டு காதல் நிர்ணயிப்பது கிடையாது. அசெளகரியமான வாழ்க்கையில் இருந்து எளிதில் விடுபட்டு புதிய வாழ்க்கையை தேடிக்கொள்ளவும், புதிய காதலை ஏற்படுத்திக் கொள்ளவும் அங்கே வழி இருக்கிறது.
ஆனால் பாரம்பரியமிக்க நமது கலாசாரத்தில் இதற்கெல்லாம் இடமில்லை. ஒருமுறை நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய வழியில்லாத சூழலில், எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.காதல் திருமணம் என்பது ஜாதி, மதங்களை கடந்து சமூக அங்கீகாரம்,ஒழுக்கம்,கெளரவம்,குடும்ப பாரம்பரியம் உள்ளிட்ட பல சமூக சிக்கல்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. அதனால் இதில் அஜாக்கிரதை என்பது துளியும் இருக்கக்கூடாது.
மேலைநாட்டு பாணியில் வயது வித்தியாசம் இல்லாமல் காதலிப்பது நம் நாட்டிற்கு ஒருபோதும் சரிவராது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவித குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே காதலிக்கும்போது கண்ணை மூடிக்கொண்டால் கூட பரவாயில்லை. அறிவை நிச்சயம் திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். இது சரி, இது தவறு என்பதை அறிவு எந்தநேரத்திலும் காதலர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். கண்மூடித்தனமான காதலால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் அவர்களை சார்ந்த குடும்பமும் தான். இதனால் காதலர்கள் தங்களுக்குள் ஏகப்பட்ட வயது வித்தியாசத்தை வைத்துக்கொண்டு தங்களுடையது தெய்வீகக் காதல் என்று உளறித்திரிவதை நிறுத்த வேண்டும்.
பெண்ணுக்கு வாழ்க்கை என்பதே பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது. கல்வியறிவும்,வேலையும்,பணமும் மட்டும் அந்த பாதுகாப்பை தந்து விட முடியாது.அதனால் தேர்ந்தெடுக்கப்படும் துணை நம்பிக்கையானதாக இருக்க வேண்டும். அழிந்து போகும் அந்தஸ்திற்காக அழியாத காதலை சமாதியாக்கியது அந்த காலம். ஆனால் காதலுக்கு மரியாதை கொடுத்து வாழவைக்க சித்தமாயிருக்கும் இந்த காலத்தில் ஒத்துவராத காதலை கொஞ்சம் ஓரம் தள்ளிவிட்டு அறிவுப்பூர்வமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் அழகு.
காதலில் சேர்ந்து வாழ்ந்தவர்களை விட, சமாதியானவர்களின் காதலைத்தான் காவியம் பேசுகிறது. இப்படி தூய்மையான காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படும்போது தான் சமூகத்தில் எதிர்ப்பு அலைகள் கிளம்பி காதலை வாழ வைக்க முற்படுகிறது. அது நல்ல விஷயம்தான். ஆனால் அதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இப்படிபட்டவர்களது காதலை களங்கப்படுத்தும் விதத்தில்,ஏமாற்று காதலை சமூகத்தில் நடமாட விடுவது, யோசிக்க வைக்கும் விஷயம். அதிலும் கவலை தரும் விடயம் இப்படிபட்ட பொருந்தாக்காதல் தம்மை பரிசுத்த காதலாக சித்தரித்து கடைசி வரை போராடிப் பார்ப்பதாகும். இது அவமானமா? அல்லது பிறருக்கான அவதானமா? என்று சம்பந்தப்படுபவரே தீர்மானிக்க வேண்டும்.
சகோதரியே! "சாட்சிக் காரனை விட சண்டை காரனை அனுகுவதே சில விடயங்களில் நன்மையாகும். நீங்கள் உங்கள் அண்ணா அறியாதவாறு, அந்த மாதுவை சந்தித்து, ஆத்திரப்படாமல் அமைதியாக யதார்த்தத்தினை எடுத்துக் கூறுங்கள். ஒரு வேளை உங்களுடைய அண்ணா தங்களிடம் "தற்கொலை மிரட்டல்" பண்ணியதை போல் அவ் மாதுவிடமும் பண்ணியதால் அவரால் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்திருக்கலாம். எனவே பேசிப் பார்த்தால் தீர்வு இலகுவாக கிடைக்க வாய்ப்புள்ளது. அம் மாதுவினால் மட்டுமே உங்கள் அண்ணாவை விடுதலையாக்க முடியும். அத்துடன் உங்கள் அண்ணாவின் பிடித்த நண்பர்களிடம் எடுத்து கூறி, அண்ணாவிற்கு ஆலோசனை பண்ண சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் அண்ணாவை நல்லதொரு உளவியலாளரிடம் கூட்டிச் சென்று சிகிச்சை அளியுங்கள். எனினும் உங்கள் அண்ணாவின் பிரச்சனையினை மிக கவனமாக கையாளுங்கள். உங்கள் அண்ணா அந்த மாதுவை திருமணம் பண்ணினாலோ அல்லது தற்கொலை பண்ணினாலோ இழப்பு உங்களுக்குத்தான்.
குறிப்பிட்ட வயதை தாண்டிய மாது/ஆடவர்களே தயவு செய்து இளம் வயதினரை விட்டுவிடுங்கள். அவர்கள் சிறியவர்கள்.அவர்களுக்கு பக்குவமில்லை. உய்தறியும் வயதில்லை. எனவே அவர்களது வாழ்க்கையை நாசமாக்காதீர்கள். அவர்கள் உங்கள் மீது பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் வாழ்க்கையை பலியாக்கிடாதீர்கள். அவர்கள் உங்கள் மீது வைத்த அன்பிற்கு நீங்கள் காட்டும் பிரதியுபகாரம் இதுதானா? அவர்களை வாழ விடுங்கள். வாழ்ந்து அனுபவித்த நீங்கள்,வாழாத இன்னொருவரின் வாழக்கையை கைப்பற்றாதீங்கள். அது இன்னொருத்தியின் வாழ்க்கையை பறிப்பதற்கு சமம்.
இன்றைய கேள்வி பதில் -28.09.2014
Reviewed by NEWMANNAR
on
September 28, 2016
Rating:

No comments:
Post a Comment