மக்களின் அச்சமற்ற போராட்டங்களே எம் இருப்பை இன்றுவரை பாதுகாக்கிறது
எதிர்வரும் 24ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்றை அகிம்சை வழியில் முன்னெடுக்க தமிழ் மக்கள் பேரவை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
*சட்டவிரோத பெளத்த சிங்கள குடியேற்றத்தைத் தடுத்தல்.
*சர்வதேச போர்க்குற்ற விசாரணை.
*தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை.
இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடங்களை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவையால் இந்த மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம், தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தொழிற் சங்கங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களையும் பொது மக்களையும் இப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள்பேரவை தமிழின் பெயரால் கேட்டுள்ளது.
இத்தகையதோர் நிலையில் போருக்குப் பின்பு தமிழர் தாயகத்தில்- யாழ்ப்பாண மண்ணில் நடக் கின்ற மிகப்பெரிதான பேரணியாக இது அமையும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
முற்றுமுழுதாக ஜனநாயகப் பண்புடன் அகிம்சை வழியில் அமைதியான முறையில் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற பேரணியாக இது அமையும்போது, இதன் தாக்கமானது,
*தமிழ் மக்கள் கேட்பது நியாயமானது என்ற ஒரு கருத்தியலை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தும்.
*தமிழ் மக்களின் கோரிக்கைகளை அசட்டை செய்கின்ற ஆட்சித் தரப்பின் நிலைப்பாடுமாறும்.
*அகிம்சை வழியில்-இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கூறுங்கள் என்று தமிழ் மக்கள் கேட்பதானது நியாயமானது என்ற நிலைப்பாட்டை சிங்கள மக்களிடம் ஏற்படுத்தும்.
ஒட்டுமொத்தத்தில், தமிழ் மக்கள் தாங்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்களை எடுத்தியம்புவதற்காகவும் நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு சர்வ தேச சமூகம் இன்று வரை எதையும் உருப்படியாகச் செய்யவில்லை என்ற செய்தியினை உலகின் செவியில் இடித்துரைப்பதற்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமை விடயத்தில் விழிப்பாகவே இருக்கின்றனர் என்ற தகவலை சொல்வதற்கும் இப் பேரணிதான் ஒரே வழி என்று தமிழ்ப் புத்தி ஜீவிகளும் தமிழ் பற்றாளர்களும் பொது மக்களும் கருதுகின்றனர்.
இக் கருத்தியல் நியாயமானது. ஏனெனில், தமிழர் தாயகத்தில் அண்மைக்காலத்தில் நில அபகரிப்புகளில் ஈடுபட்டபோது அந்தந்தப் பிரதேச மக்கள் துணிச்சலுடன் அதனை எதிர்த்தனர்.
அதன் காரணமாக படையினருக்காக காணி அளப்பது, காணி அபகரிப்பது என்ற விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
மயிலிட்டி இறங்குதுறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்நோக்கத்துடன் கீரிமலையில் இறங்குதுறை அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்ட போது, அதனை பொது அமைப்புகள் எதிர்த்ததன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதேபோன்று நயினாதீவு நாகவிகாரைக்கு முன்பாக கடல் பிரதேசத்தில் 67அடி உயரமான புத்தர் சிலையை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் இன்று வரை மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக அந்த முயற்சியை முன்னெடுக்க முடியாமல் சம்பந்தப்பட்டவர்கள் திக்குமுக்காடுகின்றனர்.
இவ்வாறாக எங்கள் தமிழ் மக்கள் சிறு குழுக்களாக சேர்ந்தேனும் சட்டவிரோதச் செயல்களுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான எதிர்ப்புக்கள் எங்கள் கிராமங்களை, ஊர்களை, எல்லைகளை, கலாசாரங்களை, சமயத்தை எங்கள் வரலாற்று பதிவுகளை காப்பாற்றி வருகின்றன என்ற உண்மைகளையும் உணர வேண்டும்.
இந்த அடிப்படையில் இப்போது எங்களிடம் இரு க்கக்கூடிய பிரமாஸ்திரமாகிய ஒன்றுபட்ட மக்கள் சக்தியை பேரணியாக்கிக் காட்டுவதே ஒரே வழியாகும்.
அந்த பிரமாஸ்திரம் எங்களையும் ஒற்றுமைப் படுத்தும்; தமிழ்மீது பற்றுறுதி கொள்ளச் செய்யும். அதேபோல் சர்வதேசத்தையும் நல்லாட்சியையும் நாங்கள் தமிழர்களுக்கு ஏதேனும் செய்தோமா? என்று சிந்திக்க வைக்கும் என்பது சர்வநிச்சயம்.
மக்களின் அச்சமற்ற போராட்டங்களே எம் இருப்பை இன்றுவரை பாதுகாக்கிறது
Reviewed by NEWMANNAR
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment