திருகோணமலையில் வன இலாகா அதிகாரிகளின் நடவடிக்கைக்கு சம்பந்தன் கடும் ஆட்சேபனை....
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் போட்டு வன இலாகாவிற்கு சொந்தமாக கைப்பற்றியமைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திருகோணமலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் எதிர்க்கட்சித்தலைவர் இராசம்பந்தன், உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகுரூப் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றன.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு காணி சம்பந்தமாக பேசுகையில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தனது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டார்.
வன இலாகா அதிகாரிகளைப் பார்த்து அவர் குறிப்பிடுகையில்,
திருகோணமலையின் பல பகுதிகளில் மக்களின் காணிகளை வன இலாகாவினர் பொருத்தமற்ற முறையில் தமது திணைக்களத்தினதாக்கி கொண்டுள்ளனர்.
எல்லைக்கற்களைப் போட்டுள்ளனர்.
மக்கள் மீளக்குடியமர்ந்து தமது வாழ்வாதாரத்தை செய்ய முடியாது தவிக்கின்றனர். அவர்கள் எங்கு விவசாயம் செய்வது எனவும் கேள்வி எழுப்பினர்.
உதாரணமாக குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் , பெரியகுளம், தெற்கு துவக்கம், தென்னமரவாடி வரை 4835 ஏக்கர் காணிகளை எடுத்து எல்லையிட்டுள்ளீர்கள்.
இதில் 3420 ஏக்கர் காணி அபிவிருத்தி அனுமதி பத்திரங்களைக் கொண்டவை.
500 ஏக்கர் தனியாருக்குச்சொந்தமானவை . அவற்றை எவ்வாறு எடுக்க முடியும்.
இவ்வாறு தான் மூதுார் கங்கு வேலிப்பகுதியிலும் மக்களின் காணிகளை எடுத்து எல்லையிட்டுள்ளீர்கள்.
இது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது. மக்கள் முப்பது, இருபது வருடங்களாக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்தனர்.
இதனால் அவர்களது காணிகள் காடுகளால் சூழப்பட்டுள்ளது என்பதற்காக அவர்களது காணிகளை எவ்வாறு எல்லையிட முடியும்.
அவர்களது காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும். அரச அதிபர், பிரதேச செயலாளர் இதற்கான நடவடிக்கையை எடுத்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
நல்ல சூழ்நிலை திரும்பும் நிலையில் மக்கள் அவர்களது தொழிலை செய்யவதில்லை. அவர்கள் தமது விவசாயத்தை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இங்கு குறுக்கிட்ட வனவள அதிகாரி,
இது கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டவை. காடாக இருந்தமையால் நாம் எல்லையிட்டோம். அந்தக்காணிகள் அரசிற்குரியதாகும் எனவும் பதிலளித்தார்.
ஆயினும், இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதுவிடயத்தில் ஏன் பிரதேச செயலாளருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இங்கு அரச அதிபர் வினவினார்.
அதற்கு பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன் குறிப்பிடுகையில்,
மக்களின் காணி என்றாலும் அது காடாக இருந்தமையால் அவர்கள் அடைத்ததாக தெரிவித்தனர். அதற்கான விபரங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இதே பிரிவில் உள்ள நிலாவெளி கடற்படை முகாம் இன்னும் அகற்றப்படாமை பற்றி மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனாரத்தனன் மீளவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரச அதிபர்,
அது பற்றி ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. இன்னும் பதில் வரவில்லை. இன்றும் கடற்படையினரின் சார்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதுபற்றி குறிப்பிட்ட சம்பந்தன். தற்போது யுத்தம் இல்லை தானே ஏன் கடற்படையினர் மக்களின் இடங்களில் முகாமை வைத்திருக்க வேண்டும். அதனை உடன் ஏன் அகற்றவில்லை, உரிய அதிகாரியும் இங்கு ஏன் வரவில்லை.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்மானம் எடுக்கும் இத்தகைய கூட்டங்களில் அவர் வந்திருக்க வேண்டும்.
உரிய அதிகாரிக்கு மீள தெரியப்படுத்தி மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் எனக் கூறினார்.
இங்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி,
சம்பூரில் மீளக்குடியமர்த்தப்பட்ட இடத்தில் இருந்த மலையில் முருகன் ஆலயத்தை காணவில்லை என்றும் அங்குள்ள காணிகளுக்கு மக்கள் செல்ல முடியவில்லை என்றும் தற்போது முருகன் ஆலயத்திற்கு பதிலாக பௌத்த ஆலயம் உள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அங்கு உள்ள மக்களின் காணிகளுக்கு அவர்கள் சென்று தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இதனை ஏன் கடற்படையினர் தடுக்கின்றனர்.
கடற்படையினருக்கான பெரும் நிலப்பரப்பு அங்கு வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.
இவை தொடர்பாகவும் விரைவான நடவடிக்கைளை அரச அதிபர் எடுக்க வேண்டும் என சம்பந்தன் வலியுறுத்தினார்.
திருகோணமலையில் வன இலாகா அதிகாரிகளின் நடவடிக்கைக்கு சம்பந்தன் கடும் ஆட்சேபனை....
Reviewed by Author
on
September 13, 2016
Rating:

No comments:
Post a Comment