அண்மைய செய்திகள்

recent
-

சுயமாக நடமாட முடியாத நோயாளிகளை பராமரிக்கும் செயற்திட்டம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பம்!


யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் கிளிநொச்சியில் சம்பிரதாய பூர்வமாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர்,


இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது.

அதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. எமது மாகாணத்தில் கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்க முடியாமல் வீடுகளில் உள்ளனர்.

இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.

எனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லை. மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலசிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன்கருதியே இந்த செயற்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.

இந்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்து புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.

மேலும், புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டுநிறுவனங்களினூடாகவே இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.எதிர்காலத்தில் இந்த செயற்திட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர், மற்றும் உதவியாளர் ஒருவர் இடம்பெறுவர்.

இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு களவிஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவார்கள் என்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சுயமாக நடமாட முடியாத நோயாளிகளை பராமரிக்கும் செயற்திட்டம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பம்! Reviewed by Author on October 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.