அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் றிசாட் பொய்யுரைக்கின்றாரா?

2010ஆம் ஆண்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் வடமாகாண ஆளுனர் சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுத்து அமைச்சர் றிசாட் பொய் உரைக்கின்றார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆண்டு காலப் பகுதியில் அமைச்சர் றிசாட் மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோரின் இணைத் தலைமையில் அப்போதைய மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மக்கள் பிரதிகள் என 83 பேரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வவுனியா, ஓமந்தைப் பகுதியை உப நகரமாக மாற்றுவது என திட்டமிடப்பட்டு அதற்கென வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருந்து ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் 560 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

அந்தக் காலப் பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத் திட்டம், கைத்தொழில் பேட்டை, கலாச்சார நிலையம், விளையாட்டு அரங்கம், தொழில் நுட்பக் கல்லூரி, பொருளாதார மத்திய நிலையம், வாகன தரிப்பிடம் என்பவற்றுக்கான காணிகள் பிரித்து ஒதுக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இருந்தது.

அதன் பின்னர் குறித்த ஓமந்தை, வேப்பங்குளம் பகுதிக்கு ஆளுனர் சந்திரசிறி, அமைச்சர் றிசாட், அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோர் சென்று காணிகளை பார்வையிட்டிருந்ததுடன் அமைச்சர் றிசாட்டினால் கைத்தொழில் பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு அண்மித்தாக ஒரு தொகுதி நிலம் கோரப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் அந்நிலம் வழங்கப்பட்டு, அவ்விடத்திலேயே அமைச்சரின் ஆதரவுடன் அவரது உறவினர் ஒருவரால் ஈய தொழிற்சாலை ஒன்று குடியிருப்புக்களை அண்மித்ததாக அமைக்கப்பட்டு தற்போதும் இயங்கி வருகிறது. இதனை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறு இருக்க, அண்மையில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 2010 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்தின் படி பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என கூட்டமைப்பினரால் கருத்து முன்வைக்கப்பட்ட போது 2010 ஆம் ஆண்டு அவ்வாறு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் முன்னாள் அரச அதிபர் தனக்கு தெரியாது சதி செய்துள்ளார் எனவும் அவ்வாறு ஒரு தீர்மானம் எடுத்தது பற்றி தெரியாது எனவும் அமைச்சர் றிசாட் தெரிவித்திருந்ததுடன் முன்னாள் அரச அதிபர் மீதும் குற்றம் சாட்டியும் உள்ளார்.

ஆகவே இவ்விடயத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் எதற்காக பொய்யுரைக்கின்றார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளதுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நல்லிணக்கப்படுத்துவதாகவும் மாவட்ட உயர் அதிகாரி மீது குற்றம் சாட்ட முற்படுவது குறித்தும் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்ட போது,

2010ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் றிசாட் ஆளுனர் சந்திசிறி தலைமையில் நடைபெற்ற போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கு அமைவாக வன இலாகாவிடம் இருந்து இக்காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபை 2009 – 2030 வரையிலான நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திட்டமிடல்களை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனை நடைமுறைப்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஓமந்தையை உப நகரமாக மாற்றியமைக்கப்பட்டு தனியான பிரதேச செயலக பிரிவாக அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இவ்வளவு செயற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கபினட் அமைச்சருமான ஒருவர் இது பற்றி தனக்கு தெரியாது எனக் கூறுவது இவருடைய பொறுப்பு என்ன? அதிகாரம் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறது எனத் தெரிவித்தார்.

இதே வேளை, குறித்த 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நுனைஸ் பாறுக், முன்னாள் நகரசபைத் தலைவரும் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

துளியம்


அமைச்சர் றிசாட் பொய்யுரைக்கின்றாரா? Reviewed by NEWMANNAR on October 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.