அண்மைய செய்திகள்

recent
-

அதர்மம் அழிந்தால் மட்டுமே தீபத் திருநாள் அர்த்தம் பெறும்

இன்று தீபாவளித் திருநாள். நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்து தர்மம் நிலைநாட்டப்பட்ட நாள்.
இந்நாள் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிமயமான நாளாகப் போற்றப்படுவதன் அர்த்தமாக தீபாவளித் திருநாள் உலகுவாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

அதர்மம் என்பது இருள் மயமானது. தர்மம் ஒளி மயமானது. இருள் மயமான அதர்மம் தலைவிரித் தாடும்போது அதனை அடக்கி அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்.

அவ்வாறு தர்மம் நிலைநாட்டப்பட்டால், அது மனித சமூகத்துக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கும். இந்த அர்த்தத்தை உணர்த்துவதே தீபாவளித் திருநாள்.

ஆக, ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தர்மத்தைப் பாதுகாக்கப்பாடுபட வேண்டும். இதற்காக நரகாசுரனை வதம் செய்ய வந்த நாராயணமூர்த்தி போல அவதாரம் எடுத்தல் தேவையன்று.

மாறாக ஒவ்வொருவரும் மனத்தால், மெய்யால், மொழியால் பிறர்க்குத் தீங்கு செய்யாமல் இருந்தால் - தன்வாழ்நாள் முழுமையிலும் தர்மத்தோடு நடப்பது என்று திடசங்கற்பம் கொண்டால் அது போதுமானது.

எனினும் இலங்கைத் தமழ் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என நினைப்பதாகத் தெரியவில்லை. எங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அளிக்கின்ற வாக்குகளை தர்மத்தைக் காக்கும் வண்ணம் அளித்தால் அதுவே போதுமானதாகும்.

இதைவிடுத்து தேர்தல் வருகிறது. ஆசாடபூதிகள் கும்பிடு கோலத்தில் வந்து போயினர். எனவே அவர் களுக்கு எங்கள் வாக்கு என்று கடன் கழிப்புச் செய்து விட, மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறதல்லவா? இஃது நாம் நமக்கு விலை கொடுத்து வாங்கிக் கொண்டதுதான்.

உதாரணத்துக்கு நேற்று முன்தினம் வடக்கு மாகாண சபை கூடி பிரதி அவைத் தலைவரைத் தெரிவு செய்திருந்தமை யாவரும் அறிந்ததே.

தான்வரும்வரை பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்ய வேண்டாம் என்று வடக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டிருந்த போதிலும் அதனை மீறி வடக்கு மாகாண சபையில் ஒரு சிலரின் திமிர்த்தனம் அரங்கேறி இருக்கின்றது என்றால்,

தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் தங்கள் தலையில் மண்ணைக் கொட்டுவதற்கு என்பது தெரிகிறதல்லவா?
வடக்கின் முதலமைச்சர் தமிழ் மக்களின் நலன் சார்ந்து, வடபுலத்தின் அபிவிருத்தி சார்ந்து இலண்ட னுக்குச் சென்றிருக்கும் வேளையில்,

நான் வரும்வரை பிரதி அவைத்தலைவர் தெரிவை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நிலை யில், பிரதி அவைத்தலைவரை அவசர அவசரமாகத் தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?

வடக்கு முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் வடக்கு மாகாண சபை இல்லை. நானே வடக்கு மாகாண சபையை நடத்துகிறேன். ஆகையால் இந்த வடக்கு மாகாண சபை பேரினவாதத்தோடு சேர்ந்துதான் செயற்படும் என்பதை காட்டுவதற்காக அன்றி வேறு எதற்காகவும் பிரதி அவைத் தலைவர் தெரிவை செய்திருக்க வேண்டியதில்லை.

தமிழ் மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளாத சிலர் இப்போது வடக்கு மாகாண முதலமைச்சரின் பெறுமதியை, அவர் மீது உலகம் கொண்டுள்ள மதிப்பை குறைப்புச் செய்யும் குப்பை வேலையை அரங்கேற்றியுள்ளனர்.

இங்குதான் அதர்மத்தை ஆசனத்தில் இருத்தி விட, தர்மம் இல்லாத இடத்து அதர்மம் அக்கிரமம் செய்து தமிழினத்தின் ஒளிமயமான எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டது.

வடக்கு முதலமைச்சரின் கோரிக்கைக்கு வட மாகாண சபை மதிப்பளிக்காதபோது சிங்களத் தலைவர்கள் - சர்வதேச பிரதிநிதிகள் எங்ஙனம் முதல்வரின் வார்த்தைக்கு மதிப்பளிப்பர்.

ஆக, போட்ட திட்டத்தை நிறைவேற்றி தமிழினத்தின் தலையில் மண்ணை கொட்டியவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள்தான் இனி தீர்ப்பு வழங்க வேண்டும்.
அதர்மம் அழிந்தால் மட்டுமே தீபத் திருநாள் அர்த்தம் பெறும் Reviewed by NEWMANNAR on October 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.