எமது மக்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழ பிரார்த்திக்கிறேன்!
நீண்ட நெடுங்காலமாக துன்பத்தையும், துயரங்களையும் அனுபவித்த எம் மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு வாழ அனைவரும் இணைந்து இத் தீபாவளித் தினத்தில் இறையருளை வேண்டிப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
தீபாவளித் திருநாளானது இந்து மதத்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு சமய விழாவாகும்.
ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய நாள் தீபாவளிக் காலமாகும்.
இந்நாளில் வீடுகளிலும் அக்கம் பக்கங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதனால் இந்நாளுக்குத் தீபாவளி என்று பெயர்வந்ததாக சைவப் பெரியார்கள் குறிப்பிடுகின்றனர்.
பல கொடுமைகளையும், பஞ்சமா பாவங்களையும் செய்து வந்த நரகாசுரன் என்ற அசுரனின் துன்புறுத்தல்களிலிருந்து தம்மை விடுவிக்குமாறு இறைவனிடம் தேவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, எம் பெருமானால் அவன் சங்காரம் செய்யப்பட்டபோது, தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அன்றைய நாளில் யாரெல்லாம் ஆசாரமுள்ளவர்களாய், பஞ்சமா பாவங்களை விடுத்து இறைவனைத் தியானித்துப் பூஜிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரகம் விடுத்துச் சொர்க்கம் அருள வேண்டும் எனக் கேட்டதற்கமைய அவனுக்கு அருள் வழங்கி மோட்சமளித்ததாக எமது சமய நூல்கள் செப்புகின்றன.
அத்தகைய சிறப்புமிகு இன்றைய இத்தீபத் திருநாளில் நீண்ட நெடுங்காலம் துன்ப, துயரங்களை அனுபவித்த மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு வாழ அனைவரும் இணைந்து இறையருளை வேண்டிப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுவதுடன், எமது மக்கள் சாந்தி, சமாதானம் பெற்று வாழ எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எமது மக்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழ பிரார்த்திக்கிறேன்!
Reviewed by Author
on
October 29, 2016
Rating:
Reviewed by Author
on
October 29, 2016
Rating:


No comments:
Post a Comment