உலக மக்கள் காத்திருக்கும் அந்த நபர் யார்? இறுதி தருணம்!
உலகமே பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 14 கோடி 63 இலட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்காக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, 4 கோடிக்கும் அதிகமான மக்கள் முன்னதாகவே தங்களது வாக்குகளை பதிவு செய்துக் கொண்டனர்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும்(68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும்(70) இடையே கடுமையான போட்டி நிலவிவருகின்றது.
இவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் எனபது அனைவர் மனதில் ஒரு எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகிலேயே வல்லரசாகத் திகழும் நாடு அமெரிக்கா. அந்த நாட்டில் அதிபராக இருப்பவர், அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ கட்டுப்பட்டவர் அல்ல.
எந்த விடயத்திலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் அவ்வளவு எளிதான காரியமல்ல.
தேசத்துரோகம் மற்றும் கொள்ளை உள்ளிட்ட மோசமான குற்றங்களுக்காக வேண்டுமானால், அவர் மீது நாடாளுமன்றம் விசாரணை நடாத்தி பதவி நீக்கமுடியும். வேறு தண்டனை வழங்கி விடமுடியாது. தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலை விதியையே மாற்றும் வலிமை அவருக்கு உண்டு
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலகமே ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கமான நிகழ்வுதான்.
தேர்தல்முறை -
அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அதிபர், துணையதிபர் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகும்.
ஒவ்வொரு லீப் வருடத்திலும் நவம்பர் மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடத்தப்படுகின்றது.
அதன்படி இந்த ஆண்டு நவம்பர் 08ஆம் திகதி (நாளை) நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகளை சற்றே உற்று நோக்குவோம்....
அதிபராக தேர்வு செய்யப்படுபவர் நாடு முழுவதிலும் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் மட்டும் போதாது. மாகாண ரீதியில் தேர்வாளர் குழுவின் வாக்குகளை அதிகம் பெறவேண்டும் என்பது கட்டாயமாகும்.
228 ஆண்டுகளாக பாரம்பரியம் கொண்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் அரசியல் சட்டப்படி மாகாண அளவிலான தேர்வாளர்குழு மூலமாகவே அதிபரும், துணையதிபரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
எனினும் இந்த தேர்வாளர் குழு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் மாகாணவாரியாக மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்தான் அதிபராகவும், துணையதிபராகவும் முடியும்.
அமெரிக்காவின் 50 மாகாணங்கள், மத்தியரசின் ஆட்சிக்கு உட்பட்ட தலைநகரப்பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றிலிருந்து 538 தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பல்வேறு மாகாணங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் தேர்தல் முடிந்த பிறகு வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமைக்கு அடுத்து வரும் திங்கட்கிழமை அந்தந்த மாகாணத் தலைநகரங்களில் கூடுவார்கள்.
51 இடங்களிலும் ஒரேநேரத்தில் தேர்வாளர் கூட்டம் நடக்கும்.
அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதே நடைமுறையில் துணையதிபரும் தேர்வு செய்யப்படுவார்.
பெரும்பாலான மாகாணங்களில் அதிகவாக்குகளை (சிலமாகாணங்களில் 50 சதவீதத்திற்கு அதிகமான) ஒருவேட்பாளர் பெற்றால், அந்த மாநிலத்தின் அனைத்து தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார்.
ஒருசில மாகாணங்களில் மட்டுமே விகிதாசார முறைப்படி தேர்வாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள்.
1. அமெரிக்காவில் பிறந்த அந்த நாட்டுக் குடிமகனாக இருக்க வேண்டும்.
2. 35 வயது நிறைவு அடைந்திருக்க வேண்டும்.
3. 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும்.
இப்போதைய அதிபர் பராக் ஒபாமா அதிபர் தேர்தலில் முடிவு செய்தபோது அவர் அமெரிக்காவில் பிறந்த குடிமகன் அல்ல என்று சர்ச்சையெழுந்த போதிலும், இது தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டாலும் இறுதியில் ஒபாமாவிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக மக்கள் காத்திருக்கும் அந்த நபர் யார்? இறுதி தருணம்!
Reviewed by Author
on
November 08, 2016
Rating:

No comments:
Post a Comment