துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்! சபையில் அமைச்சர் விஜயகலா ஆவேசம்!
பெரும்பான்மையினருக்கு காணப்படும் அனைத்து உரிமைகளும் சிறுபான்மையினருக்கும் காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் தமிழர்களின் பூர்வீக காணிகளில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடாது இருக்க முடியுமா என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சபையில் கேள்வியெழுப்பினார்.
வடக்கில் உள்ள துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி அவற்றை மக்களிடத்தில் கையளிக்குமாறும் சபையில் பகிரங்கமாக கோரிக்கை விடுத்த அவர், வலி.வடக்கு, பரவிப்பாஞ்சான் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை மீளவும் கையளிக்கும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 2017ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தின் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு, காணி அமைச்சு ஆகியவற்றின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதன் பின்னர் வடக்கு கிழக்கில் படிப்படியாக காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக வலி.வடக்கில் எமது தேசிய அரசாங்கத்தின் 18மாத காலப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு மேலும் பல ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ளது. அவற்றை விடுவிக்கப்படுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் தேசிய அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை நான் இந்த சபையில் வலியுறுத்துகின்றேன்.
வலி.வடக்கில் தனியாருக்கு சொந்தமான 6ஆயிரம் ஏக்கர் காணிகள் 25வருடங்களுக்கு மேலாக படையினரின் பிடியில் உள்ளது. அவற்றை விரைவாக மக்களிடத்தில் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென காணி அமைச்சரிடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பாக வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். ஆகவே தமிழ் மக்கள் யுத்த காலத்திலும் அதனைக் கடந்த காலத்திலும் தமது சொந்த நிலங்களை இழந்து படும் கஷ்டத்தை அவர் நன்கு அறிவார்.
எனவே இதற்குரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதனை இந்த நல்லாட்சியில் மட்டுமே செய்து முடிக்க முடியும் என்பதையும் இச்சபையில் கூற விரும்புகின்றேன்.
அதேநேரம் வலி.வடக்கில் ஆலயங்கள், தேவாலயங்கள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. மக்கள் தமது வழிபாடுகளைச் செய்ய முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள். இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து மத வழிப்பாட்டுத் தலங்களை விடுவிக்க வேண்டும்.
பொது எதிரணி உறுப்பினர் ஸ்ரீயாணி விக்கிரம தனது உரையில் வடக்கில் பௌத்த மத தலங்களை அமைப்பதற்கு தமிழர்கள் இனவாதம் காட்டி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
உண்மையிலேயே தமிழர்கள் எந்தவொரு மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர். தாம் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த நாட்டிலே சமயம் சார்ந்த உங்களுக்கு இருக்கும் அனைத்தும் உரிமைகளும் எமக்கும் உள்ளன. சிறுபான்மையினர் என்பதால் உரிமைகளை கொண்டிருக்காதவர்கள் என்று கருதவேண்டாம். சமயம் மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் ஏனைய சமூகங்களைப்போன்றே உள்ளன.
அதேநேரம் இன்னொரு விடயத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். எமது பூர்வீக காணிகளில் பௌத்த விகாரைகளை அமைப்பது எந்தவகையில் நியாயமாகும். அவ்வாறு அமைப்பதற்கே நாம் எதிர்ப்புக்களை வெளியிடுகின்றோம். அதனை இனவாதமாக கருதவேண்டாம்.
வடக்கிலே வரலாற்று பௌத்த தலங்களான நாக விகாரை, ஜம்புகோள பட்டினம் போன்ற பகுதிக்கு பெரும்பான்மை இனத்தவர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றார்கள். அதற்கு தமிழர்கள் யாரும் எதிர்ப்பை வெளியிடவில்லையே. ஆகவே பொய்யான பிரசாரம் செய்து இனவாதத்தை வளர்க்காதீர்கள்.
இதேநேரம் 20வருடங்களுக்கு அதிகமாக இரணை தீவு கடற்படையினரின் வசம் உள்ளது. அந்த பிரதேசத்தைச் சேர்ந்தமக்கள் இரணை மா நகரத்தில் வாழ்கின்றனர். சுமார் 400 குடும்பங்கள் அங்குள்ளார்கள். அவர்கள் மீண்டும் குடியேற்றப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அதன் மூலமாகத்தான் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்ததன் காரணத்தால் 12 குடும்பங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. எதிர்க்கட்சித்தலைவர் சென்று அவர்களின் போராட்டத்தை கைவிடுமாறு கோரிய போதும் அவர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
பின்னர் என்னுடன் தொடர்பு கொண்டபோது நான் அங்கு நேரில் சென்றேன். அந்த மக்களின் முன்னிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர் மூன்று மாத காலத்திற்குள் அவர்களின் சொந்த நிலங்கள் விடுவிக்கப்படுமென வாக்குறுதி அளித்திருந்தேன்.
அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் அடுத்த மாதம் எட்டாம் திகதி குறித்த கால அவகாசம் நிறைவடைகின்றது.எனவே அதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கும் என்ற நம்பிக்கையில் பரவிப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த 12 குடும்பங்கள் உள்ளன என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அதேநேரம் முப்பது வருட காலமாக யுத்தம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் உரிமைக்காக போராடியவர்களுக்கு துயிலுமில்லம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலப்பகுதிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது.
குறிப்பாக கோப்பாய் துயிலுமில்லம், வரணி துயிலுமில்லம், கொடிகாமம் துயிலுமில்லம், வல்வெட்டித்துறை எள்ளங்குளம் துயிலுமில்லம், மன்னார் மாவட்டத்தில் ஆண்டான் குளம், பண்டிவிரிச்சான் துயிலுமில்லங்கள், வவுனியா ஈச்சக்குளம் துயிலுமில்லம், முல்லைத்தீவில் ஆலங்குளம், அலம்பில், கணிக்காடு, பேராவில் துயிலுமில்லங்கள் அனைத்தும் இராணுவத்தின் பிடியில் உள்ளன. அவை விடுவிக்கப்பட வேண்டுமென இந்த உயரிய சபையில் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்! சபையில் அமைச்சர் விஜயகலா ஆவேசம்!
Reviewed by Author
on
November 27, 2016
Rating:
Reviewed by Author
on
November 27, 2016
Rating:


No comments:
Post a Comment