உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளாருக்கு சிறப்பு விருது.....
கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் இறுதிநாள் நிறைவு அரங்கில் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அன்றைய அமர்வில் அடிகளாரின் தமிழ் இலக்கியப் பணிகளைப் பாராட்டி அவருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 11-12-13 ஆகிய மூன்று தினங்களாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்ற மாநாட்டு மண்டபத்தில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் மற்றும் இந்தியா-மலேசியா- சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் ஆய்வாளர்கள் இலக்கியவாதிகள் எனப் பலரும் வருகைதந்திருந்தனர்.
இம்மாநாட்டின் இறுதி நாள் நிறைவு அமர்வின்போது மன்னார் தமிழ்ச் சங்கத் தாபகரும் மன்னார் மறைமாவட்ட ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனரும் ‘மன்னா’ என்ற மாதாந்தக் கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சிறப்புரையாற்றினார்.
நீண்ட நெடிய - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான - தமிழ் இலக்கிய வரலாற்றுப் பாரம்பரியத்தில்; தமிழ் மொழிக்கும் சமயங்களுக்கும் இடையிலான உறவு தொடர்பு பற்றியும் இலக்கியத்தின் ஊடாக எவ்வாறு நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பலாம் என்பது குறித்தும் அடிகளார் இங்கு உரையாற்றினார்.
“தமிழால் சமயங்கள் வளர்ந்தன சமயங்களால் தமிழ் வளர்ந்தது” என்பதை அடிகளார் சுட்டிக்காட்டிää உலகின் மற்ற மொழிகளோடு ஒப்பிடும்போது தமிழில்தான் அதிக சமய சார்பான இலக்கியங்கள் உண்டு என்றும் “தமிழ் பக்தியின் மொழி’ என்றும் பன்மொழி வல்லுனரான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் தெரிவித்த கருத்துக்களையும் தமிழ் நேசன் அடிகளார் இங்கு குறிப்பிட்டு உரையாற்றினார்.
தமிழ் நேசன் அடிகளாருடைய தமிழ் இலக்கியப் பணிகளைப் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. நிறைவுநாள் அமர்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் இந்த விருதை வழங்கிவைத்தார். சிறப்பு அதிதிகளாக பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
நிறைவு நிகழ்வில் பல்துறை சார்ந்த பல இஸ்லாமிய கலை இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும் இஸ்லாம் அல்லாத மூன்று முக்கிய ஆளுமைகளுக்கே சிறப்பு விருது வழங்கப்பட்டது. பல்வேறு தளங்களில் தமிழ்ப் பணியாற்றம் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்ää மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா மூத்த எழுத்தாளரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியருமான டாக்டர் தி. ஞானசேகரன் ஆகியோருக்கே இந்த சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனா அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவர் மூன்றாம் நாள் நிறைவு விழாவில் கலந்துகொண்டு விருதுகளை வழங்க இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டார். இலங்கை இஸ்லாமிய ஆய்வகம் இம்மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளாருக்கு சிறப்பு விருது.....
Reviewed by Author
on
December 16, 2016
Rating:

No comments:
Post a Comment