அண்மைய செய்திகள்

recent
-

உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து உலகக் கூட்டமைப்பு உருவாகட்டும் காலம் கனிந்துள்ளது என முதலமைச்சர் சி.வி உரை


உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்று உருவாக வேண்டும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அவ்அமைப்பை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் எனும் தொனிப்பொருளில் வட மாகாண உழவர் பெருவிழா நேற்றைய தினம் யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து வருகின்றது.

தைப்பொங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கே உரியதொரு கொண்டாட்டம் என்பது போய் முழுத்தமிழ் இனத்தையும் ஒற்றுமைப்படுத்தி  ஒன்றாகச் சேர்த்து கொண்டாட வழிவகுக்கும் ஒரு விழாவாக மாறியுள்ளது. அத்துடன் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர் கூட தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார்கள்.

இவ்வாறான தைப்பொங்கல் கொண்டாட்டம் முழுத்தமிழ் இனத்தையே சேர்க்க வல்லதாக இருக்கும் போது சகல நாடுகளிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களும் தமக்குள் ஒற்றுமையை வரவழைக்க, வளர்க்க தைப்பொங்கலை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

எவ்வாறு நாங்கள் நான்கைந்து கட்சிகளைச் சேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்தோமோ அதேபோல் உலகம் பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் சேர்ந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது. இறைவன் அருளால் அவ்வாறான அமைப் பொன்று உருவாக வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

சாதி, மத, வர்க்க பேதமின்றி நாடுகள் கடந்து எம் மக்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் எமது குறைகளை உலகுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதற்குத் தைப்பொங்கல் மையமாக அமையட்டும்.
தைத் திருநாளில் தைப்பொங்கல் நிகழ்வுகளுடன் மேலதிகமாக தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக் கட்டு அல்லது ஏறு தழுவல், உறியடித்தல், பட்டம் ஏற்றும் போட்டிகள் என பலதரப்பட்ட போட்டிகளிலும் மக்கள் ஈடுபடுவார்கள்.

இந்த வகையில் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை உடைய தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. எமது படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நவீன தொழில்நுட்ப அறிவுடன் விவசாயத்தில் தன்னிறைவைக் காண எமது படித்த வாலிபர்கள் முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் விவசாயத்தின்பால் கொண்டுள்ள நாட்டத்தையும் விவசாயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக் கொள்கின்ற நன்மைகளையும் கண்ணுற்ற பலர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. விரைவில் இவ்வாறு கை யகப்படுத்தியுள்ளவர்கள் தாம் குடியேறி இருக்கும் காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் விவசாய நிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எமது தரிசு நிலங்களில் ஒரு சிறு பகுதிகூட விவசாய  முயற்சிகளுக்கு பயன்படுத்தாது எஞ்சியிருக்கக் கூடாது. ஏதாவது காரணங்களால் சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் தொடர முடியாத விடத்து அக் காணிகளை தற்காலிகமாகவேனும் விவசாய அமைச்சு பொறுப் பேற்று அந் நிலங்களில் தோதான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எமது உற்பத்திகள் அதிகரிப்பதுடன் நிலங்களும் பாதுகாக்கப்படும்.

எவ்வாறு மழைநீர் ஒருதுளி கூட கடலை அடையாது சேமிக்கப்பட வேண்டுமோ தரிசு நிலங்களும் உரியவாறு பயன்படுத்தாமல் வைத்திருக்கப்படாது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து உலகக் கூட்டமைப்பு உருவாகட்டும் காலம் கனிந்துள்ளது என முதலமைச்சர் சி.வி உரை Reviewed by Author on January 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.