நில மீட்புப் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - மாவை
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க அஹிம்சை வழியிலான வன்முறைகளுக்கு இடமளிக்காத ஜனநாயக வழிப் போராட்டங்களில் அனைவரும் பங்கு கொள்ளவேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப் பினருமான மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,
சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில் ஜனநாயக வழிகளில் அரசுப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் சொந்த நிலங்களை மீட்கவும் அந்த நிலங்களில் மீளக்குடியேறி வாழ்வதற்குமான உரிமை மறுக்கப்பட்ட மக்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இனவிடுதலைப் போராட்ட காலங்களில் துன்பமான துயரமான இழப்புக்களையும் அனுபவித்த மக்கள் திடசங்கற்பம் கொண்டு நடத்தும் போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம்.
ஒரு திட்டமிட்ட அடிப்படையில் அனைவரும் ஒருங்கிணைந்து இலக்கை எட்டும் வரை போராடுவது நியாயமானதேயாகும். இப்போராட்டங்களில் அமைதியான அஹிம்சை வழியிலான வன்முறைகளுக்கு இடமளிக்காத ஜனநாயகவழிப் போராட்டங்களில் நாம் பங்குகொள்ள வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து அதற்குச் சொந்தமான மக்களை மீளக் குடியமர்த்துவோம் என ஜனாதிபதியும் அரசும் வாக்குறுதி அளித்து இரண்டு வருடங்களாகிவிட்டன.
இக் காலத்தில் ஒருசிறு முன்னேற்றம் ஏற்;பட்டதே தவிர மக்கள் நிலங்கள் பெருமளவில் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இவ்விடயங்களில் 2012, 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில் இலங்கை உட்பட அங்கத்துவ நாடுகளினால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைத் தீர்மானங்கள் பெருமளவில் நிறைவேற்றப்படாமல் அரசும் ஜனாதிபதியும் இழுத்தடிப்புச் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களைப் போராட அரசு நிர்ப்பந்திப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜனாதிபதியும் அரசும் உடன் நேரடியாகக் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த மக்களை மீPளத் தங்கள் நிலங்களில் குடியேற்ற வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றோம். அனைத்துத் தரப்பு மக்கள், சிவில் அமைப்புக்கள் நிலமீட்புக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவதையும் வரவேற்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்றத்திலும் நேரடியாகவும் ஜனாதிபதி யிடமும் அரசிடமும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில், முல்லைத்தீவில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பிலும் ஒத்திவைப்புப் பிரேரணை கொண்டு வந்து விவாதித்துள்ளனர். ஆனாலும் விடிவு இல்லை. எனவே மக்கள் போராட் டங்களை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்கள் சொந்த நிலங்களை விடுவித்து மீளக்குடியிருப் புக்குரித்தான மக்கள் வாழ்வுரிமைப் போராட்டங்களை ஆதரிப்போம் அப்போராட்டங்களின் பங்காளிகளாவோம்.
இத்தகைய போராட்டங்களை நடத்தியும் பங்களிப்புச் செய்தும், ஆதரித்தும் வந்த வரலாற்றைக் கொண்ட நான், சென்ற திங்கள் 09.01.2017 அன்று நினைவிழக்கும் வரையிலான கொடிய நோயொன்றினால் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததனால் நான் பங்கு பற்ற முடியவில்லை என எனது மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி நோயிலிருந்து தேறுவதற்கு மருந்து உட்கொண்டு வருகின்றேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியுள்ளது. இருப்பினும் நான் விரைவாகத் தேறி வருகின்றேன்.
இத்தகைய போராட்டங்களை ஆதரிக்கின்றேன். விரைவில் போராட்டங்களில் பங்கெடுக்க முடியும் என நம்புகின்றேன். அதனாலும் இவ்வறிக்கையை வெளியிடுகின்றேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில மீட்புப் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - மாவை
Reviewed by Author
on
February 20, 2017
Rating:

No comments:
Post a Comment