இராணுவம் சுட்டு வீழ்த்தினாலும் காணிக்குள் வீழ்ந்தே உயிரை விடுவோம்! கேப்பாப்பிலவு மக்கள் உறுதி
கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் கடந்த 19 நாட்களாக விமானப்படை முன்பாக தமது காணிகளை விடுவிக்கக்கோரி உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதில் தேவையில்லாமல் காணிக்குள் உட்சென்றால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள் தாம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானாலும் காணிக்குள் வீழ்ந்தே உயிரை விடுவோம் என உறுதியாகத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள், விமானப்படை பிடித்து வைத்துள்ள தமது காணியை விடுவிக்ககோரி நேற்று பத்தொன்பதாவது நாளாகவும் கடும் இராணுவம் மற்றும் விமானப்படை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். எரிக்கும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் பலர் சுகவீனமடைந்துள்ளனர்.
மக்களுடைய போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், விமானப்படையும் தமது முன்னரங்குகளை பலப்படுத்தி வருகின்றமையை காணமுடிகின்றது. எனினும் மக்கள் விமானப்படையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் சில தினங்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டம் வேறு திசைக்கு திரும்பும் எனவும் அந்த மக்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை பாடசாலை மாணவர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை காலை ஒரு மணிநேர போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தமது காணிகளை விடுவிப்பதாக கூறி இராணுவமும் அரச அதிகாரிகளும் எம்மை ஏமாற்று கின்றனர் என குற்றஞ்சாட்டி தமது காணி விடுவிப்பு தொடர்பான உறுதியான திகதியை வழங்குமாறு கூறி அங்குள்ள விமானப் படை முகாம் முன்பாக கடந்த 31 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த போராட்டத்தை நிறுத்து மாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும் உறுதியான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது பல சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இனியும் தாம் ஏமாற முடியாது என கூறி தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குடியிருப்பாளர்களின் பிள்ளைகள் கடந்த பல நாட்களாக பாடசாலை செல்லாத நிலையிலும், வீதிகளில் சமைக்கப்படும் சுத்தமற்ற உணவுகளையும் உண்ட வண்ணம் கடும் பனியில் படுத்துறங்கி வருகின்றனர்.
இதனால் அவர்களது உடல்நிலை வேகமாக பாதிப்படைந்து வருகின்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களாக காணப்படுவதால் அவர்களது உடல் நிலையும் காலநிலையால் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றது.
இது தவிர தொடர்ந்தும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.
நேற்றும் நேற்றுமுன்தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை விமானப் படையினர் காணிக்குள் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காவீர்கள் என அறிவுறுத்தல் மூலம் அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் போராட்டத்தில் உறுதியான மக்கள் தாம் காணிக்குள் செல்லும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தாம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானாலும் தமது காணிக்குள் வீழ்ந்தே உயிரை விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
நன்றி-வலம்புரி-
இராணுவம் சுட்டு வீழ்த்தினாலும் காணிக்குள் வீழ்ந்தே உயிரை விடுவோம்! கேப்பாப்பிலவு மக்கள் உறுதி
Reviewed by Author
on
February 20, 2017
Rating:

No comments:
Post a Comment