வடக்கில் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிய அஞ்சும் மக்கள்....
வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் கடந்த ஜனவரி மாதத்தில் பொலிஸாருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த இரண்டு முறைப்பாடுகளும் காணி தொடர்பான பிரச்சினைகளில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் ஆகும். இதில் ஒரு முறைப்பாடு மன்னார் மாவட்டத்தில் இருந்தும் மற்றையது யாழ்.மாவட்டத்தில் இருந்தும் பெறப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் வட மாகாணத்தில் பொலிஸாருக்கு எதிராக 26 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 20 முறைப்பாடுகளுக்கு சரியான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
எனினும் பொலிஸாரினால் பாதிக்கப்படும் மக்கள் தமது முறைப்பாடுகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பதிவு செய்வதற்கு அஞ்சுகின்றனர். அதேநேரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பேரில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வும் காணப்படுவதில்லை. எனவே மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி இவ் வருடம் வடமாகாணத்தில் உள்ள சகல கிராம சேவையாளர்களுக்கும் கடிதம் மூலமாக ஆலோசனை வழங்கியுள்ளோம்.
இதில் பொலிஸார் மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யாமை பதிவு செய்த முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமை பொதுமக்களை அல்லது சந்தேக நபர்களைத் தாக்குதல் அல்லது சித்திரவதைக்கு உட்படுத்துதல் பொதுமக்களை அல்லது சந்தேக நபர்களை உள ரீதியாகத் துன்புறுத்துதல், பொலிஸார் தமது அதிகாரங்களைத் துஷ்பிரயோகப்படுத்துதல்,முறைப்பாடுகள் தொடர்பில் பக்கச் சார்பாகச் செயற்படல், சட்டவிரோதமான முறையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,
சந்தேகநபர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தல், காவலில் இருக்கும் சந்தேக நபர்க ளுக்கு அடிப்படை வசதிகளை செய்யாமை, சட்டதிட்டங்களை மீறி பொலிஸார் செயற்படுதல், போன்ற தவறுகள் பொலிஸாரிடத்தில் காணப்படும் பட்சத்தில் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி தேசிய பொலிஸ் ஆணைக் குழுவில் முறையிடலாம்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலுவலகம் யாழ்.மாவட்ட செயலகத்தில் 55 ஆம் இலக்க அலுவலகத்தில் அமைந்துள்ளது. இலக்கம் 55, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, வட மாகாணம், யாழ்.மாவட்ட செயலகம் எனும் முகவரிக்கு கடிதம் மூலமாக முறைப்பாடுகளைச் செய்யமுடியும் அல்லது 0215107722 எனும் தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்புகொள்வதன் மூலம் முறைப்பாடுகளைப் பதிவு செய்யமுடியும் என தெரிவித்தார்.
வடக்கில் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிய அஞ்சும் மக்கள்....
Reviewed by Author
on
February 19, 2017
Rating:
Reviewed by Author
on
February 19, 2017
Rating:


No comments:
Post a Comment