எத்தனை பேருக்கு இன்றைய முல்லைத்தீவு மக்களின் நிலைமை தெரியும்?
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்புப் பகுதியில் தங்களது காணிகளில் மீள்குடியேறியுள்ள மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தற்போது பெய்து வரும் மழையினால் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த 2000ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசத்தில் காணிகள் இன்றி வாழ்ந்த சுமார் 54 வரையான குடும்பங்களுக்கு அப்போது பிலக்குடியிருப்பு பகுதியில் அரை எக்கருக்கும் குறைவான காணிகளே வழங்கப்பட்டிருந்தன.
அக்காலப்பகுதியில் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை ஆற்றிய தொண்டு நிறுவனங்கள் அந்த மக்களுக்கான தற்காலிக வீடுகள் அரை நிரந்தர வீடுகள் மலசலகூட வசதிகள் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கியிருந்தன.
தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்குரிய நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை தமக்கென வழங்கப்பட்ட காணிகளில் தங்களுக்கு தேவையான மரக்கறிப்பயிர்கள் வாழை, தென்னை, மா, பலா, என பயன்தரு மரங்களையும் வளர்த்து கடந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயற்கை அழகு கொண்ட கிராமமாகக் காணப்பட்டது.
ஆரம்பத்தில் 54 குடும்பங்கள் குடியேறியதை தொடர்ந்து 84 வரையான குடும்பங்கள் இங்கு குடியேறி வாழ்ந்துள்ளன.
இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இந்த அழகிய கிராமத்தில் வாழ்ந்த இந்த மக்கள் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று இறுதி யுத்தத்தின் போது தங்களது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்தனர்.
மெனிக்பாம் முகாம் வரை கொண்டு செல்லப்பட்டும் பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டு கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மாதிரிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வாழ்வாதாரத் தொழில்கள் இன்றி நல்ல ஒரு வாழ்க்கை முறையின்றி பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வந்ததுடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
கடந்த ஜனவரி 31ஆம் திகதி அவர்களது காணிகளை விடுவிப்பதாக கூறப்பட்ட நிலையில் மக்களின் காணிகள் உரியவகையில் வழங்கப்படவில்லை.
விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்திருந்த தமது காணிகளுக்கு முன்னால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கடந்த முதலாம் திகதி அவர்களது காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து அன்றைய தினமே அந்த மக்கள் மீள்குடியேறியுள்ளனர்.
இவ்வாறு மீள்குடியேறி மக்களின் காணிகளில் இருந்த பயன்தரு மரங்கள், மலசலகூடங்கள், வீடுகள் அனைத்தும் இடித்தழிக்கப்பட்ட நிலையில் வெற்றுத்தரைகளில் தங்களது சொந்த காணிகளில் இம்மக்கள் குடியேறியுள்ளனர்.
advertisement
இவ்வாறு மீள்குடியேறிய மக்கள் கடந்த ஒரு மாத காலம் கொட்டும் பனியிலும் மழையிலும், வெயிலிலும் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணித்தாய்மார் என பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் காணிகள் விடுவிக்கப்பட்டு மீள்குடியேறி எந்த வசதிகளும் இன்றி அடிப்படையில் வாழ்வதற்குஒரு கொட்டில் கூட இல்லாது மரங்களின் கீழ் வாழும் ஒருஅவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் மீள்குடியேறிய மக்கள் தமது நாளைய தேவைக்கென எதையும் சேர்த்து வைக்கக்கூடிய அல்லது மாத வருமானம் பெறும் குடும்பங்கள் அல்ல.
அனைத்து குடும்பங்களுமே அன்றாடம் கூலிவேலையை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தங்கள் குடும்பங்களின் வாழ்க்கையை கொண்டு செல்பவர்கள்.
ஒரு மாத காலம் எந்த வேலைகளுமின்றி மண்ணுக்காக போராட்டம் நடத்தியதால் எந்த வேலையும் இல்லை. இப்போது மர நிழலில், வாழும் வாழ்க்கை என்றாலும் அன்றாட உணவிற்கே பெரும் கஸ்டங்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
நாங்கள் காட்டில் தடியை வெட்டி ஒரு கொட்டில் போட்டாலும் அதற்கு வனவளப்பிரிவினர் கைது செய்து விசாரணை நீதிமன்றம் என இழுப்பார்கள் .அதற்கு இழுபடவும் செலவு செய்யவும் தண்டம் கட்டவும் எங்களிடம்எதுவும் இல்லை.
எங்களுடைய நிலை பற்றி இங்குள்ள அரச அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும். இவ்வாறு தெரிந்து கொண்டு எந்த ஒரு உதவிகளையும் செய்யாது இருக்கின்றார்கள்.
நாங்கள் எங்களுடைய மண்ணுக்காக போராடினோம் என்பதற்காக தான் எந்த உதவிகளையும் செய்யவில்லை போல் இருக்கின்றது எனத்தெரிவித்த இந்த மக்கள் எங்களை திட்டமிட்டே அதிகாரிகளும் அரசாங்கமும் பழிவாங்குகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் உடல் முழுவதும் குண்டுச் சிதறல்களையும் தாங்கி வாழும் குடும்பத்தலைவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது,
என்னால் பெரிய வேலை எதையும் செய்ய முடியாது அன்றாடம் ஊருக்குள் ஏதாவது கூலிவேலை ஏதும் இருந்தால் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு எனது குடும்ப செலவைப் பார்க்கின்றேன்.
ஒரு மாத காலம் எந்த வேலையும் இல்லை. காணியை விட்டவுடன் அதில் குடியேறுவதற்கு காணியை தூய்மை செய்வதற்கோ அல்லது கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில்பொருட்களை ஏற்றி வருவதற்கு என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை.
ஒருவரிடம் சென்று வேலை செய்து தருகின்றேன். அல்லது ஒரு கிழமையில் தருகின்றேன் என்று காலில் விழாத குறையாக இரண்டாயிரம் ரூபா கடனாக வாங்கித்தான் இன்று வீட்டுத்தேவைக்கான பொருட்களை வாங்கி வந்துள்ளேன் என தெரிவித்தார்.
அண்மையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முகமாலைப்பகுதியில் மீள்குடியமர்வின் போது உடனடியாக காணிகளை தூய்மை செய்வதற்கு 5000 ரூபாய் பணம் மற்றும் கூரை விரிப்புக்கள் சமயல் பாத்திரங்கள் மற்றும் உணவு நிவாரணப்பொருட்கள் உணவல்லாத பொருட்கள் தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு தொடர்ந்து வீட்டுத்திட்டங்கள் வழங்குதல் என்ற படி முறையே பின்பற்றப்பட்டு வருவதுடன் ஏனைய வீதிகள் குடிநீர் வசதிகள் மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இது முற்றிலும் நிலத்துக்காகவே போரானார்கள் என்ற குற்றத்திற்காகவே இவர்கள் இவ்வாறு எந்த உதவிகளும் வழங்கப்படாது அரசாங்கத்தினால் மீள்குடியேற்ற அமைச்சினால் அரச அதிகாரிகளால் பழிவாங்கப்படுகின்றார்கள் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
எத்தனை பேருக்கு இன்றைய முல்லைத்தீவு மக்களின் நிலைமை தெரியும்?
Reviewed by Author
on
March 05, 2017
Rating:

No comments:
Post a Comment