அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.வரலாற்றில் முதன்முறையாக முக்கொலை வழக்கில் எதிரிக்கு முத்தூக்கு!


யாழ்.குடாநாட்டை அதிர வைத்த அச்சுவேலி முக்கொலைச் சம்பவ வழக்கின் எதிரிக்கு முத்தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அதே சம்பவத்தில் மேற்கொண்ட இரு கொலை முயற்சி குற்றத்துக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் இரண்டு இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் செலுத்துமாறு நேற்றையதினம் தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாண வரலாற்றிலேயே மேல்நீதிமன்ற வழக்கில் அதிகூடிய தண்டனை பிறப்பிக்கப்பட்ட வழக்கு இது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

அச்சுவேலி முக்கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுற்று நேற்றைய தினம் தீர்ப்புக்காக யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போதே நீதிபதி மேற்படி தீர்ப்பளித்துள்ளார்
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில்  வசித்து வந்த பொன்னம்பலம் தனஞ்சயன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் எனும் இடத் தில் அவரது மாமியாரான நற்குணானந்தன் அருள்நாயகி, மைத்துனி யசோதரன் மதுசா,  மைத்துனன் நற்குணானந்தன் சுபாஸ்கரன் ஆகியோருக்கு மரணம் விளைவித்ததன் அடிப்படையில்  கொலை குற்றம் சாட்டப்பட்டு தனஞ்சயன் தர்மிகா மற்றும் தங்கவேல் யசோதரன் ஆகியோருக்கு கடும் காயம் ஏற்படுத்தி  கொலை செய்த எத்தனித்தார் என்ற  5 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ் மேல் நீதிமன்றில்  குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வகையில் மன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் எதிரிக்கு வாசித்துக்காட்டப்பட்ட போது  5 குற்றச்சாட்டுக்களுக்கும் எதிரிதான் சுத்தவாளி என மன்றுரை செய்ததையடுத்து தொடர் விசாரணைக்கு திகதியிடப்பட்டது. அந்த வகையில் கடந்த 27,28,29ஆம் திகதிகளில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று 4ஆம் நாளான நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி மா. இளஞ்செழியன் தனது தீர்ப் பில் தெரிவிக்கையில், வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிகளில் முக்கிய கண்கண்ட சாட்சியான எதிரியின் மனைவியின் சாட்சியத்தில்  குறித்த குற்றச்செயலை புரிந்தவர் தனது கணவனான தனஞ்சயன் என பாதிக்கப்பட்ட சாட்சியமாக நீதிமன்றில் சாட்சியமளித்திருந்தமையை மன்று கவனத்தில் எடுத்துள்ளது.

அடுத்ததாக மதுசாவின் கணவரான யசோதரன் சம்பவ தினத்தில் எதிரியுடன் மோதியவர் குறித்த வாளை அடையாளம் காட்டி சாட்சியமளித்துள்ளார்.  இவை இரண்டும் கண்கண்ட மற்றும் பாதிக்கப்பட்ட சாட்சி களாக மன்று கொள்கிறது.

அடுத்து வைத்திய நிபுணர்களின் சாட்சிகள், 3 பிரேத பரிசோதனைகள் மற்றும் காயப்பட்டவர்களை பரிசோதனை செய்துள்ளனர். குருதி வெளியேறியதன் காரணமாக ஏற்பட்ட மரணம் எனவும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் எனவும்  அவர்களின் நிபுணத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அடுத்து பொலிஸாருடைய சாட்சியங்களில், சம்பவ இடத்தில் பெற்றுக் கொண்ட தடயப் பொருட்கள், எதிரி யிடம் பெற்றுக் கொண்ட தடயப் பொருட்களை மன்றில் இலக்கமிட்டு சாட்சியமளித்துள்ளனர்.
மேலும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கை அதில் உயிரிழந்தவர்களின் இரத்தமும் வெட்டப்பட்ட கத்தியில் இருந்த இரத்தத்தையும் ஒப்பீடு செய்து அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இறுதியில் எதிரி தனது சாட்சியத்தில் தனது குடும்ப வாழ்க்கையில் முன்னர் நடை பெற்ற சம்பவங்களை தெரிவித்தார். மகனை  காட்டாத கோபம் குடும்பப் பிரச்சினை காரணமாக இச் செயல் இடம்பெற்றது என  தனது குற்றத்தையும் ஒப்புக் கொண்டிருந்தார்.

வழக்கு  தொடுநர் தரப்பு சாட்சியங்களின் (மனைவி) அடிப்படையில் 2014.05.04 ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என எண்பிக்கப்பட்டுள்ளது. அதனை ஒப்பீடு செய்யும் வகையில் யசோதரனின் சாட்சியம் அமைந்துள்ளது. மேலும் எதிரி தனது சாட்சியத்தில் தான்  கொலை செய்ததாக சாட்சியமளித்துள்ளார். 

கோபாவேசம் வருமளவுக்கு அன்றைய தினம் எந்தச்சம்பவமும் இடம்பெறவில்லை, பிள்ளையை காட்டுவது தொடர்பில் குடும்பத்தில் முரண்பாடும் ஏற்பட்டிருக்கவில்லை, எனவே நடுச்சாமத்தில் வந்து கொலை செய்யும் எண்ணத்தில் கொலைவெறித் தாக்குதலை எதிரி மேற்கொண்டுள்ளமை சந்தேகத்துக்கு அப்பால் எண்பிக்கப்பட்டுள்ளது, யாழ் குடாநாட்டை பரபரப்பில் ஆழ்த்திய குறித்த வழக்கு இரண்டரை வருடங்களில் முடிவுக்கு வந்துள்ளது. வழக்கை விரைவில் முடிப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறிய நீதிபதி,

குறித்த சம்பவம் நியாயமான சந்தேகத் துக்கு அப்பால் எண்பிக்கப்பட்டு எதிரி பொ.தனஞ்சயனை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
தீர்ப்பை வாசிக்கும் முன்னர் குற்றவாளியிடம், கடைசியாக ஏதும் சொல்ல விரும்புகிறீரா என நீதிபதி கேட்டபோது, இது சாதாரண குடும்பப் பிரச்சினை, யார் நினைத்திருந்தாலும் இதை சுமுகமாக தீர்த்து வைத் திருக்க முடியும், அவ்வாறு தீர்த்து வைத்திருந்தால் இப்படி அநியாயமாக உயிர்கள் பறிக்கப்பட்டிருக்காது.

இது அனைவரின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது என குற்றவாளி தெரிவித்தார்.
எதிரியின் மனைவியிடம் ஏதும் சொல் விரும்புகிறீரா? என நீதிபதி வினவிய போது, இவர் 3 உயிர்களை எடுத்துள்ளார். இவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளியின் மனைவி தெரிவித்தார்.

தீர்ப்பு வாசிப்பதற்காக மன்றின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்றனர், அப்போது நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

இந்த வழக்கில் மூன்று கொலைகள் புரிந்தமைக்கு  முத்தூக்கு தண்டனையும் 2 கொலை முயற்சி குற்றத்துக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அத்துடன் தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் கட்டத்தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் நட்ட ஈடும் செலுத்த வேண்டும் என்றும் கட்டத்தவறும் பட்சத்தில் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பெழுதிய பேனாவை முறித்தார்.

இந்த வழக்கு விசாரணைகளின் போது வழக்கு தொடுநர் தரப்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந் ஆஜராகியிருந்ததுடன் எதிரி தரப்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன் மற்றும் கே.ரஞ்ஜித்குமார் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். சாட்சிகளின் நலன் சார்பில் சட்டத்தரணிகளான என்.பார்த்தீபன், வி.கௌதமன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.                                         


யாழ்.வரலாற்றில் முதன்முறையாக முக்கொலை வழக்கில் எதிரிக்கு முத்தூக்கு! Reviewed by Author on April 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.