ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
வட மாகாணத்தின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு அமைய, வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராசா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினகரன் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாண கல்வி அமைச்சர் ரி. குருகுலராசா அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சரின் மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளதாக இன்றைய தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் இடமாற்றங்களில் அரசியல் செல்வாக்கை செலுத்தியதாகவும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முறையற்ற வகையில் கையாண்டதாகவும் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குரல் எழுப்பிய ஆசிரியரை இடமாற்றம் செய்வதற்கு மாகாண அமைச்சர் நடவடிக்கை எடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மூவரடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளதாக தினகரன் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கல்வி அமைச்சின் செயலாளரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என குழு மேலும் பரிந்துரைத்துள்ளது.
வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மீதும் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன.
இவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மர நடுகை, பாத்தீனிய ஒழிப்பு, நீர் ஆய்வு விடயங்களை சுற்றாடல் அமைச்சர் என்ற போர்வையில் முறையற்ற வகையில் நடைமுறைப்படுத்தியமை நிரூபணமாகியுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளதாக தினகரன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் திட்டங்களை மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே செய்திருக்க வேண்டும் என குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐங்கரநேசன் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள தண்ணீர் பௌசர்களை, உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்திருந்தாகும், விவசாயக் கிணறு புனரமைப்பு மற்றும் புழுதியாற்று நீர்பாசனத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினகரன் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தின் நான்கு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என கூறப்படும் அறிக்கையொன்று தற்போது ஊடகங்களில் கசிந்துள்ளது.
எனினும், வடமாகாண சபையில் இந்த அறிக்கை உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதிலுள்ள விடயங்களை முழுமையாக அறிக்கையிடுவதற்கு நியூஸ்பெஸ்ட் தயாராகவுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Reviewed by Author
on
June 07, 2017
Rating:

No comments:
Post a Comment