பிரிவினைவாதிகள் எவராயினும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஹக்கீம் தெரிவிப்பு
பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுப்பது எவராக இருந்தாலும் தகுதி தராதரம் பாராது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநுராதபுரத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று அமைச்சில் நடைபெற்றது.
அங்கு பொருட்களை பொறுப்பேற்ற அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்,
எல்லா பக்கங்களிலும் பிரிவினைவாதிகள் இருக்கின்றார்கள். எனினும் பொலிஸார் இது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே எமது வேண்டுகோள். தவறிழைக்கும் எவராக இருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மதத் தலைவராக இருக்கலாம். ஏதாவது பாதுகாப்பை எதிர்பார்ப்பவராக இருக்கலாம். யாராயினும் தண்டனை பொதுவானதே. பல இனவாத செயற்பாடுகள் முஸ்லிம் மக்களை அரசாங்கத்திற்கு எதிரானவர்களாக காட்டுவதற்கு அவர்களை தூண்டிவிடும் நோக்கத்திலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அரசாங்கத்தின் உயர்பீடம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவ்வித ஆதரவையோ ஒத்துழைப்பையோ வழங்கவில்லை. எனினும் பொலிஸாரின் நடவடிக்கைகள் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை என்பது எனது கருத்து.
அது தொடர்பில் விமர்சனங்கள் எழுவதை தவிர்க்க முடியாது. அதில் உண்மையும் இருக்க முடியும். இது தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருக்கின்றோம்.
இதன் பின்னர் மதத் தலைவர்கள் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துகொண்டால் அது தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவரும் அதற்கு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் என ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினைவாதிகள் எவராயினும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஹக்கீம் தெரிவிப்பு
Reviewed by Author
on
June 04, 2017
Rating:

No comments:
Post a Comment