வடக்கில் தாதியர் பற்றாக்குறைக்கு கல்வி சார்ந்த கட்டுப்பாடுகளே காரணம் : அங்கஜன் இராமநாதன்
யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி வெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை இன்று மாலை நேரடியாக சென்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பார்வையிட்டதோடு நிர்வாக கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலையின் நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்,
இங்கு பல்வேறு முக்கியமான குறைபாடுகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டன. இதில் தாதியர் பற்றாக்குறையும் முக்கியமான தேவையாக அழுத்திக்க கூறப்பட்டது.
இது தொடர்பில் யாழ். மாவட்டம் பல்வேறு சிக்கல்களை கடந்த காலங்களில் எதிர்நோக்கியது. இந்த விடயம் தொடர்பாக யாழில் ஜனாதிபதியும் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் போன்றோர் முன்னிலையில் நான் ஜனாதிபதியிடம் சில வேண்டுகோள்களை முன்வைத்துள்ளேன்.
வடக்கில் மோசமான தாதியர் பற்றாக்குறை நிலவ சில முக்கியமான தாதியர் ஆட்சேர்ப்புக்கான கட்டுப்பாடுகளே காரணம்.
குறிப்பாக உயர்தரத்தில் ஆங்கில பாடத்தில் சித்தியடைந்திருத்தல், தேசிய ரீதியான Z புள்ளியடிப்படையிலான தெரிவு, பெண்களுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்ற கட்டுப்பாடுகளால் தாதியர் வெற்றிடத்தை எமது இளைஞர் யுவதிகளை வைத்து வடக்கில் நிரப்ப முடியாமல் போய்விட்டது.
ஆங்கிலத்தில் சித்தி கட்டாயமற்றது என்றும் மாவட்ட ரீதியான "Z" புள்ளி தெரிவும் ஆண்களுக்கும் வாய்ப்பு வழங்கல் தொடர்பான கட்டுப்பாடுகளில் வடக்கிற்கு விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
அல்லது இந்த கட்டுப்பாட்டு தளர்வை வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு குறைந்தது 5 வருடங்களேனும் தளர்த்தித் தந்தால் போதுமானது .
இது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஜனாதிபதியிடமும் மத்திய சுகாதார அமைச்சரிடமும் நான் கேட்ட போது பதிலளித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன "வடக்கிற்கு என்று விசேட கவனம் எடுக்கும் படி ஜனாதிபதி பணித்தால் அதை நான் நிறைவேற்றுவேன் என்கிறார் .
என்னால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு வடக்கு சுகாதார அமைச்சரும் பூரண ஒத்துழைப்பை வழங்கினார். ஆகவே ஜனாதிபதி வடக்கின் நிலையையும் இங்குள்ள இளைஞர் யுவதிகளின் தேவையையும் நன்கு அறிந்தவர்.
ஆகவே அவர் விசேட உத்தரவை நிச்சயமாக மத்திய சுகாதார அமைச்சருக்கு கொடுப்பார் அதனூடாக எமது இளைஞர் யுவதிகள் எங்கள் பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் .
ஆகவே தாதியர் வெற்றிடங்கள் வடக்கு முழுவதிலும் விரைவில் நிரப்படும் வாய்ப்புக்கள் அதிகமே என தெரிவித்துள்ளார்.
வடக்கில் தாதியர் பற்றாக்குறைக்கு கல்வி சார்ந்த கட்டுப்பாடுகளே காரணம் : அங்கஜன் இராமநாதன்
Reviewed by Author
on
June 29, 2017
Rating:

No comments:
Post a Comment