பிரதான வீதியினை புனரமைத்துத் தருமாறு முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை....
இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு கரைத்துரைப்பற்றின் மாத்தளன், வலைஞர்மடம் அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களுக்கான முதன்மை வீதியினைப் புனரமைத்துத் தருமாறும், பேருந்து சேவைகளை நடத்துமாறும் குறித்த கிராமங்களின் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தின் போது தமது கிராமங்களில் பெருமளவு மக்கள் வருகை தந்து மீளவும் தமது கிராமங்களுக்கு சென்ற நிலையில் போர் எச்சங்கள் தமது கிராமங்களில் இருந்து அகற்றப்படவில்லை.
கடந்த ஏழாண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் கரைதுறைபற்று பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தங்களுடைய கிராமங்களுக்கு பேருந்து சேவைகள் இடம் பெறுவதில்லை, இதற்கு முதற் காரணம் பிரதான வீதி புனரமைக்கப்படாமையே எனக் குறிப்பிடப்பட்டது.
இதன் காரணமாக பத்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனை, புதுக்குடியிருப்பு நகரம் என்பவற்றிற்குச் செல்வதிலும் இருபது கிலோமீற்றர் தொலைவில் உள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனை, மாவட்டச் செயலகம், கரைதுறைபற்று பிரதேச செயலகம் என்பவற்றிற்குச் செல்வதில் நாள்தோறும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றோம்.
தேர்தல் காலங்களில் தமது கிராமத்திற்கு பேருந்துகளை அனுப்பும் அரசியல்வாதிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக தமது கிராமத்திற்கு பேருந்துகள் வருவதில்லை என்ற தகவல் தெரிந்தும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
உயர்தர வகுப்புகளுக்கு முல்லைத்தீவு மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த விடயங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எமது கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது.
முதன்மை வீதியினைப் புனரமைத்து பேருந்து சேவையினை நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதான வீதியினை புனரமைத்துத் தருமாறு முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை....
Reviewed by Author
on
June 25, 2017
Rating:

No comments:
Post a Comment