வடக்கு அமைச்சர்கள் மீதான குற்ற அறிக்கை குறித்து விசேட அமர்வு இன்று...
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடி குற்ற விசாரணையின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு இன்றைய தினம் விசேட அமர்வு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை அறிக்கை நேற்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் முதலமைச்சர் சபைக்கு சமுகம் தராமையால் இன்றைய தினம் முதலமைச்சரின் பங்கேற்புடன் விசேட அமர்வாக நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவினரும் எதிராக ஒரு குழுவினரும் மற்றும் எதிர்க்கட்சி வேறு ஒரு நிலைப்பாட்டில் நிற்க போவதாகவும் அறிய முடிகின்றது.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக கூறப்பட்டு, அவற்றை விசாரணை செய்வதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்களால் கோரப் பட்டது. இதனை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் எஸ். பத்திநாதன் ஆகிய மூன்று பேர் கொண்ட சுயாதீன விசாரணை குழு நியமிக்கப்பட்டு நான்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந் ததோடு, அமைச்சர்களும் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த விசாரணையின் அறிக்கை தற்போது முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இரு அமைச்சர்கள் முறைகேடுகள் புரிந்துள்ளதாகவும், அவ்விரு அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் எனவும் விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நிலையில் நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புடன் வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் முற்ப கல் 9.30 மணியளவில் கூடியது. இந்த அமர் விற்கு அமைச்சர்களான, பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.டெனீஸ்வரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
(சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் வெளிநாடு சென்றுள்ளார்) இந்த நிலையில் அவை அறிவித்தல்களை அவைத்தலைவர் சிவஞானம் வெளியிட்டு கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன், அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை உறுப்பினர்களுக்கு கையளித்துவிட்டே அவையை தொடர்ந்து நடத்த வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அவைத்தலைவர்,இந்த விடயம் ஏற்கனவே சபை ஒழுங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் முதலமைச்சர் தனது உறவினர் ஒருவருடைய மரண வீடு ஒன்றுக்கு அவசரமாக கொழும்பு சென்றுள்ளதால், அவர் இன்றைய தினம் (நேற்று) அவைக்கு சமுகம் தர முடியாமல் போய்விட்டது. ஆகவே முதலமைச்சர் சபையில் இல்லாமல் குறித்த விடயத்தை எடுத்து கொள்ள முடியாது. இது தொடர்பில் முதலமை ச்சருடன் கலந்துரையாடி நாளைய தினம் (இன்று) விசேட அமர்வு ஒன்றை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை அறிக்கையை முதலமைச்சர் தான் உத்தியோகபூர்வமாக சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். எனவே நாளைய தினமே (இன்று) குறித்த விடயத்தை எடுத்து கொள்வது சிறந்தது என பதிலளித்து அவையை நாளை (இன்று) 11 மணிவரை ஒத்திவைப்பதாக கூறினார். இதன் போது பேசிய உறுப் பினர் அஸ்மின், குறித்த விசாரணைக்குழு வடக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட தல்ல, முதலமைச்சராலேயே நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த விடயத்தை பிரேரணை ஒன்றின் மூலமே சபையில் முன்வைக்க முடியும் என கூறினார். எனினும் அதனை மறுதலித்த அவைத்தலைவர் சிவஞானம், முதலமைச்சர் சபைக்கு அறிவிப்பதாக கூறி அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என பதிலளித்திருந்தார்.
இதன் பின்னர் தேநீர் இடைவேளையின் பின்னர் குறித்த விடயம் உறுப்பினர் சயந்தனால் கொண்டுவரப்பட்டு, இந்த சிறப்பு அமர்வு ஒன்று தேவை தானா? என கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. எனினும் முதலமைச்சர் தீர்மானித்துள்ளதால் சிறப்பு அமர்வு நடைபெறும் என அவைத்தலைவர் பதிலளித்தார். மேலும் அமைச்சர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்கு தன்னிலை விளக்கம் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என சயந்தன் கூறினார். இதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது என அவைத்தலைவர் கூறினார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சருடன் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாட வேண்டியிருப்பதால் நாளைய (இன்றைய) கூட்டத்தை மதிய உணவிற்கு பின்னர் பிற்போடுமாறும் சயந்தன் கோரினார். அதற்கு சிவாஜிலிங்கமும் இணைந்தார்.
எனினும் மதிய இடைவேளைக்கு பின்னர் அமர்வை போட்டால் உறுப்பினர்கள் அனைவரும் நித்திரையாகி விடுவார்கள் எனவே 11.30 மணியளவில் கூட்டத்தை ஆரம்பிக்கலாம் என கூறி இன்று 11.30 மணிக்கு அவையை ஒத்திவைத்தார். இதேவேளை சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் எவ்வாறு ஊடகங்களுக்கு சென்றது என்பது குறித்து தனக்கு பதில் வேண்டும் எனவும் உறுப்பினர் தியாகராஜா கூறினார்.
வடக்கு அமைச்சர்கள் மீதான குற்ற அறிக்கை குறித்து விசேட அமர்வு இன்று...
Reviewed by Author
on
June 07, 2017
Rating:

No comments:
Post a Comment