தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’!
சூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பருவ மாற்றங்கள் மற்றும் ஏனைய இயற்கைப் பண்புகளுக்கு சூரியனே பிரதான காரணம். எனினும் அதீத வெப்பம் நிறைந்த தீச்சுவாலைகள் சூரியனின் புற மேற்பரப்பில் எழுவதால் சூரியனை நெருங்கி ஆராயும் வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்து வந்தது.
இந்த நிலையில், வைத்திய கலாநிதி இயூஜின் என்.பார்க்கர் என்ற விஞ்ஞானி சூரியனின் புற மேற்பரப்பின் பண்புகள் குறித்த தனது ஊகங்களை வெளியிட்டு வந்தார். சூரியனின் காந்தப் புயல் உள்ளிட்டஇவரது ஊகங்கள் ஒவ்வொன்றும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன. இவ்விஞ்ஞானியின் கருத்துக்களின் அடிப்படையிலேயே சூரியனை ஆராயும் விண்கலம் தற்போது தயாராகி வருகிறது.
ஏற்கனவே இந்தத் திட்டத்துக்கு வேறொரு பெயர் சூட்டப்பட்டிருந்தது. எனினும், பார்க்கரின் எதிர்வுகூறல்களாலேயே இந்தத் திட்டம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பிறந்தது என்பதால், இந்த விண்ணோடத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும் விஞ்ஞானி ஒருவரது பெயரை விண்கலத்துக்கு நாஸா சூட்டியிருப்பது இதுவே முதன்முறை!
இந்த விண்கலம், சூரியனின் புற மேற்பரப்பினுள் பரவியிருக்கும் பிளாஸ்மாவை ஊடறுத்து சுமார் நாற்பது இலட்சம் மைல்கள் வரை செல்லவுள்ளது. இதற்காக 5000 பாகை செல்ஷியஸ் என்ற அதீத வெப்பத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இவ்விண்கலம் விசேட 4.5 அங்குல கனமுடைய கார்பன் உள்ளடங்கிய தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்விண்கலம் சூரியனின் புற மேற்பரப்பில் மணிக்கு சுமார் ஏழு இலட்சம் கிலோமீற்றர் வேகத்தில் (நியூயோர்க்கில் இருந்து டோக்கியோவுக்கு ஒரு நிமிட நேரத்தில் பயணிக்கக்கூடிய வேகத்தில்) சுற்றி வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.
இவ்வாறு சூரியனை நெருங்கி ஆராய்வதால், உலகில் ஏற்பட்டு வரும் பருவ மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என்றும், இதனால் பல இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கவோ, அதில் இருந்து தப்பிக்கவோ முடியும் என்றும் நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி விண்ணில் ஏவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’!
Reviewed by Author
on
June 08, 2017
Rating:

No comments:
Post a Comment