அண்மைய செய்திகள்

recent
-

இந்திய தேசிய விளையாட்டு விருதுகள் அதிகாரபூர்வ அறிவிப்பு......


தேசிய விளையாட்டு விருதுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், ஆரோக்ய ராஜீவ், அமல்ராஜ் உள்பட 17 பேர் அர்ஜூனா விருது பெறுகிறார்கள்.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கு விருதுக்கு தகுதியானவர்களை முன்னாள் நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி இருந்தது. அதற்கு ஒப்புதல் அளித்து விருது பட்டியலை மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதன்படி விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதை மாற்றுத்திறனாளி ஈட்டிஎறிதல் வீரர் 36 வயதான தேவேந்திர ஜஜாரியா, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் 31 வயதான சர்தார் சிங் ஆகியோர் இணைந்து பெறுகிறார்கள். பாரா ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவர், ராஜஸ்தானை சேர்ந்த ஜஜாரியா. மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் கேல்ரத்னா விருதுக்கு தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதே போல் தேர்வு கமிட்டி பரிந்துரை செய்த 17 பேருக்கும் எந்த வித மாற்றமும் இன்றி அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது. இதில் ரியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன், திருச்சியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ஆரோக்யராஜீவ், சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஆகியோரும் அடங்குவர்.

விருது பட்டியல் வருமாறு:-

கேல்ரத்னா: தேவேந்திர ஜஜாரியா (பாரா தடகளம்), சர்தார் சிங் (ஆக்கி)

அர்ஜூனா: ஆரோக்ய ராஜீவ் (தடகளம்), மாரியப்பன் (பாரா தடகளம்), ஏ.அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்), புஜாரா (கிரிக்கெட்), ஹர்மன்பிரீத் கவுர் (பெண்கள் கிரிக்கெட்), சுரேகா (வில்வித்தை), குஷ்பிர் கவுர் (தடகளம்), பிரசாந்தி சிங் (கூடைப்பந்து), தேவேந்திரசிங் (குத்துச்சண்டை), பெம்பெம் தேவி (கால்பந்து), எஸ்.எஸ்.பி.சாவ்ராசியா (கோல்ப்), எஸ்.வி.சுனில் (ஆக்கி), ஜஸ்விர்சிங் (கபடி), பி.என்.பிரகாஷ் (துப்பாக்கி சுடுதல்), சகெத் மைனெனி (டென்னிஸ்) சத்யவாத் காடியன் (மல்யுத்தம்), வருண் சிங் பட்டி (பாரா தடகளம்).

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது பெறுவோர் பட்டியல்: ராமகிருஷ்ணன் காந்தி (தடகளம்), ஹீரா நந்த் கட்டாரியா (கபடி), ஜி.எஸ்.எஸ்.வி.பிரசாத் (பேட்மிண்டன்), பிரிஜ் பூஷன் மொகந்தி (குத்துச்சண்டை), ரபேல் (ஆக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்), ரோஷன் லால் (மல்யுத்தம்).

வாழ்நாள் சாதனையாளருக்கான தயானந்த் சந்த் விருது பெறுவோர் விவரம்: பூபிந்தர்சிங் (தடகளம்), சையத் ஷாகித் ஹகிம் (கால்பந்து), சுமராய் டேட் (ஆக்கி).

விருது வழங்கும் விழா வருகிற 29-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவிப்பார்.

கேல்ரத்னா விருதுடன் ரூ.7½ லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பட்டயமும் வழங்கப்படும். மற்ற விருதுகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு பட்டயம் அளிக்கப்படும்.

இந்திய தேசிய விளையாட்டு விருதுகள் அதிகாரபூர்வ அறிவிப்பு...... Reviewed by Author on August 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.