யாழில் இரவு பகலாக தீவிர சோதனை நடத்த காரணம் என்ன?
கடந்த சில தினங்களாக குடாநாட்டில் இரவு பகலாக, சிறப்பு அதிரடி படையினரால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தேடுதல் நடவடிக்கைக்கு தமிழ் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு வெளிட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினரை இணைத்துக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மாத்திரம் இந்த நடவடிக்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கிட்டத்தட்ட 100 பேர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலை பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வன்முறை சம்பவங்களுக்கு தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம், பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சட்ட விரோதமாக மணல் கடத்தியமை, வால் வெட்டுச் சம்பவம், கடற்படையினரோடு மோதலில் ஈடுபட்டமை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் நோக்கிலேயே பொலிஸாரும் அதிரடிப் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையினால் யாழ்ப்பாணத்தில் சேவை செய்யும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவசியமான நியாயமான காரணங்கள் காணப்பட்டால் மாத்திரம் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைக்கு அனுமதி வழங்குமாறு குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழில் இரவு பகலாக தீவிர சோதனை நடத்த காரணம் என்ன?
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment