வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்....
வட கொரியாவின் ஏவுகணை திட்டத்திற்கு எதிரான புதிய தடைகளை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
வட கொரியாவின் ஏற்றுமதி மீது தடை, அந்நாட்டில் செய்யப்படும் முதலீடுகளை கட்டுப்படுத்துவது போன்ற தடைகளை விதிக்கின்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் ஐநா தூதர் நிக்கி ஹாலே கருத்து தெரிவிக்கையில், இந்த தலைமுறையில் எந்தவொரு நாட்டுக்கும் விதிக்கப்படாத மிகவும் கடுமையான தடைகள் இவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா, அமெரிக்கா முழுவதையும் தாக்குகின்ற சக்தி தங்களிடம் இருப்பதாக கூறியது.
இருப்பினும், வட கொரியாவின் ஏவுகணைகள், இலக்குகளை துல்லியமாக தாக்குகின்ற சக்தி பெற்றிருப்பதில் நிபுணர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் கண்டிக்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனைகள், வட கொரியா மீது ஐநா புதிய தடைகளை விதிக்க செய்துள்ளன.
நிலக்கரி, தாதுப் பொருட்கள் மற்றும் கச்சா பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது வட கொரியாவின் வருமானத்திற்கு ஒரு வழியாக உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை வட கொரியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த தடைகளால் ஒரு பில்லியன் வர்த்தகம் தடைப்பட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியா மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வட கொரியாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதை சீனா இடைநிறுத்தியது.
ஆனால், மீண்டும் மீண்டும் விதிக்கப்பட்டுள்ள தடைகள், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளவதை தடுப்பதில் தோல்வியையே கண்டுள்ளன.
சர்வதேச அளவில் வட கொரியாவின் ஒரேயொரு நட்பு நாடாக இருக்கும் சீனா, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் வெட்டு அதிகாரமுடைய உறுப்பினராக இருந்து வருகிறது, இந்த முறை வட கொரியா மீதான தடைகளுக்கு சீனா ஆதரவாக வாக்களித்திருக்கிறது.
கடந்த காலங்களில் வட கொரியாவுக்கு தீங்கு விளைவிக்கும் தீர்மானங்களில் இருந்து சீனா வட கொரியாவை காப்பாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா மீதான பாலிஸ்டிக் ஏவுகணை நடவடிக்கைகளுக்கான தடையை முற்றிலும் புதிய நிலைக்கு ஐநா பாதுகாப்பவை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க ஐநா தூதர் தெரிவித்திருக்கிறார்.
வட கொரிய சர்வாதிகாரியை கண்காணிப்பில் வைத்திருக்க ஐநா பாதுகாப்பு அவை ஒருமித்த கருத்தோடு வந்துள்ளது" என்று ஹாலே குறிப்பிட்டுள்ளார்.
"வட கொரியாவின் பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான செயல்பாடுகள் அதன் ஆட்சியாளர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிதாகிவிட்டதை இந்த தடைகள் காட்டுகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா பாதுகாப்பவை தீர்மானத்தில் சீனாவின் நிலைப்பாட்டை ஹாலே புகழ்ந்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நிலை பற்றிய ஒருமித்த கருத்தோடு உலக நாடுகள் இருப்பதை ஐநா பாதுகாப்பவையின் இந்த தீர்மானம் காட்டுவதாக சீனாவின் தூதுர் லியு ஜியேயி தெரிவித்திருக்கிறார்.
வட கொரியாவில் ஆட்சி மாற்றத்தை அல்லது கொரியாவை இணைப்பதை முதன்மைப்படுத்துவது நோக்கமல்ல என்கிற அமெரிக்காவின் அறிக்கைகளை அவர் வரவேற்றுள்ளார்.
ஆனால், தென் கொரியாவில் அமெரிக்கா ஏவுகணை தடுத்து அழித்துவிடும் தாட் அமைப்பை உருவாக்கியிருப்பதை ரஷ்ய தூதரோடு இணைந்து, விமர்சித்த அவர், அதனை பொருத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
"ஐநா பாதுகாப்பவையில் நாங்கள் எடுத்துள்ள தீர்மானத்திற்கு வட கொரியாவே முழு பொறுப்பு" என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் தூதர் மேத்யு ரெகுரோஃட் கூறியுள்ளார்.
"இந்த வழிமுறையில் இருக்க தேவையில்லை. வட கொரியா ஆத்திரமூட்டுவதை கைவிட வேண்டும். இன்னும் இத்தகைய செயல்களை மேற்கொள்வதை விட்டுவிட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- BBC - Tamil-
வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்....
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment