ஒரு வருடத்திற்கு மேலாகியும் எனது மகளின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லையே! கண்ணீர் விடும் தாய்...
வவுனியாவில் கெங்காதரன் ஹரிஸ்ணவி என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை என ஹரிஸ்ணவியின் தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.
வவுனியா - உக்கிளாங்கும் பகுதியில் கடந்த 2016.02.16 அன்று தனது வீட்டில் வைத்து மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது படுகொலை இடம்பெற்று ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்றும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதே தவிர எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தில் ஹரிஷ்ணவியின் வீட்டிற்கு அருகிலுள்ள குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது மேல் நீதிமன்ற பிணையுடன் வெளியே வந்துள்ளார்.
எனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த நபருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
எனது மகளின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும். 13 வயதில் எனது மகளின் வாழ்வினை சிதைத்து சின்னாபின்னமாக்கிய கயவனை கைது செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
எனது மகளின் ஆசைகள் நிறைவேற்றப்படவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத துன்பத்தை அவள் எமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்.
எனவே எனது மகளின் வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஹரிஸ்ணவியின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பான வழக்கு 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடத்திற்கு மேலாகியும் எனது மகளின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லையே! கண்ணீர் விடும் தாய்...
Reviewed by Author
on
August 09, 2017
Rating:

No comments:
Post a Comment