சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா?
சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கனகராயன்குளம் மற்றும் புதுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட தங்கம்மா முதியோர் இல்லம் திறந்து வைக்கும் நிகழ்விலும், இலங்கை தமிழர் நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையை கொண்டு செல்வதில் இருந்த இடையூறுகளை தாண்டி இணைந்திருந்த வடகிழக்கு 18 ஆண்டுகளிற்கு பின்னர் பிரிக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 2006ம் ஆண்டு நடத்தப்பட்டது.
அதன் பின்னராக 2013ஆம் ஆண்டு வட மாகாணத்திற்கான தேர்தலை சந்தித்து மக்களுடைய பாரிய பங்களிப்போடு ஒரு சபையை அமைத்து எங்களிற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளோடு இணைந்த உரிமைக்காக பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
இதன் போது நாங்கள் சரியான பாதையில் எங்களை கொண்டு செல்வதில் பல தடங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பல்வேறு பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும், 2013ஆம் ஆண்டு முதலமைச்சர் தலைமையில் நான்கு அமைச்சர்களை கொண்டு அமைக்கப்பட்ட அமைச்சர் குழு போல் இனி வருமா?
அல்லது அமைச்சர் வாரியத்தை கொண்ட பெறுமதியான குழுவினை முதலமைச்சரினால் உருவாக்கிக் கொள்ள முடியுமா? என்ற கேள்விகள் எல்லோர் மத்தியிலும் இருக்கின்றன.
தேசிய அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்காக பல்வேறுபட்ட காலங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
அது தந்தை செல்வா காலமாக இருக்கலாம், பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட சந்திரிக்காவால் கொண்டு வரப்பட்ட பொதி அதற்கு பிற்பாடு பிரேமதாச காலத்தில் பேசப்பட்ட விடயங்கள், அதற்கு பிற்பாடு 19 தடவைகள் மகிந்த ராஜபக்ச காலத்தில் அவர்களுடைய கட்சி ரீதியாக பேசியிருக்கிறார்கள்.
இதை விட தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியான விடுதலை பயணத்தை மேற்கொள்ளும் போது ஒஸ்லோவில் வைத்து பேசிய பேச்சுக்கள், இடைப்பட்ட காலப்பகுதியில் பல்வேறுபட்ட அரசுடன் அவர்கள் பேசி ஒரு சுமுக நிலையை உருவாக்க எடுத்து கொண்ட முயற்சிகள் எல்லாமே இன்று ஒரு மாறுபட்ட சூழலுக்கு வந்திருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா?
Reviewed by Author
on
August 14, 2017
Rating:

No comments:
Post a Comment