மீண்டும் உச்சமடையும் கூட்டமைப்புக் குழப்பம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டுக் குழப்பம் மீண்டும் உச்சக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.
வடமாகாண அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க சம்பந்தன் விக்னேஸ்வரன் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவு இப்போது இன்னொரு நெருக்கடியில் போய் நிற்கிறது.
கடந்த 5ம் திகதி முதலமைச்சரின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தமிழரசுக் கட்சிகை்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் விளைவாக வடமாகாண அமைச்சரவையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கீழ் இணைந்திருப்பதில்லை என்ற முடிவை தமிழரசுக் கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் எடுத்திருக்கின்றனர்.
இதற்கமைய தமிழரசுக் கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தனது பதவியை விட்டு விலகியிருக்கிறார்.
அடுத்து அமைச்சரவை மாற்றத்தின் போது இவரை வெளியேற்றுவதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக இருந்தார். அதற்கு முன்னர் தாமாகவே பதவியை விட்டு விலகியிருக்கிறார் சத்தியலிங்கம்.
எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் தமிழரசுக் கட்சி இல்லாத அமைச்சரவை தான் வடமாகாண சபையில் பதவியில் இருக்கப் போகிறது.
தமிழரசுக் கட்சி இல்லாத அமைச்சரவை, அதே தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மை ஆதரவை நம்பி ஆட்சியை நடத்த வேண்டிய வித்தியாசமான சூழல் முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் திறமை, தகுதி ஆகியவற்றை மாத்திரம் கருத்தில் கொண்டு அமைச்சர்களை நியமிப்பதில் முன்னர் அக்கறை காட்டியிருந்தார்.
இப்போது அவர் தனக்குச் சாதகமாக நடந்தவர்கள், நடந்து கொள்ளக் கூடியவர்களையே தெரிவு செய்வதில் அக்கறை கொண்டுள்ளார். இந்தநிலையில் முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே.
இத்தகைய சூழ்நிலையை தோற்றுவித்தவர் முதலமைச்சரே என்பதில் சந்தேகமில்லை. பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் ஒன்றில் கட்சிகளின் பரிந்துரைக்கு மதிப்பளிக்க இணங்கியிருக்க வேண்டும் அல்லது கட்சிகளின் பரிந்துரைகளை ஏற்க முடியாதென தெளிவாக கூறியிருக்க வேண்டும்.
இதன் விளைவு தமிழரசுக் கட்சி மாகாண அமைச்சரவையில் இருந்து வெளியேறும் நிலை உருவாகியிருக்கிறது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு வந்த தமிழரசுக் கட்சிக்கு புதியதொரு பாதையைக் காட்டுவதாக அமையலாம்.
முதலமைச்சர் மற்றும் சம்பந்தனுடன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசுவதற்கு முன்னதாக, வவுனியாவில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் என்பன தனியாக ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தன.
அதில் தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தி விட்டு மூன்று கட்சிகளும் இணைந்து செயற்படுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது மாவட்ட மட்டக் கூட்டமாக இருந்தாலும் கட்சிகளின் உயர்மட்ட ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தது.
எனினும் தமிழரசுக் கட்சியைத் தனிமைப்படுத்தி விட்டு ஏனைய மூன்று கட்சிகளும் இணைந்து செயற்படுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை ரெலோவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சிறிகாந்தா நிராகரித்திருந்தார்.
அவ்வாறு செயற்பட ரெலோ ஒருபோதும் இணங்காது என்றும் அவர் அறிக்கையொன்றில் கூறியிருந்தார். ஆனாலும் வடமாகாண சபை விவகாரத்தை ஒட்டிய விடயங்களில் தமிழரசுக் கட்சிக்கு சாதகமான நிலைப்பாட்டை ரெலோ ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.
வவுனியாவில் மூன்று கட்சிகளும் சந்தித்துப் பேசுவதற்கு முன்னர் ஒரு நிகழ்வு நடந்தது. வடமாகாண சபையின் போனஸ் ஆசனத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தமிழரசுக் கட்சி யாழ். வணிகர் கழகத் தலைவரான ஜெயசேகரத்தை நியமித்திருந்தது.
இவர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ஈபிஆர்எல்எவ்வுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் தான் போட்டியிட்டவர். தமிழ்க் கட்சிகளில் தமிழரசுக் கட்சியே நிர்வாக ரீதியான கட்டமைப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறது.
ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு அத்தகைய கட்டமைப்பும் கிடையாது. தேர்தல் வரும்போது தகுதியான வேட்பாளர்களை நிறுத்தும் வலுவும் கிடையாது.
வடமாகாண சபைத் தேர்தலில் தமக்கு இடங்களைக் கேட்டு சண்டையிடும் பங்காளிக் கட்சிகள் இடங்களைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் திணறுவது தான் வரலாறு.
இவ்வாறு தான் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஜெயசேகரம், அனந்தராஜ் போன்றவர்களை ஈபிஆர்எல்எவ் பயன்படுத்திக் கொண்டது. கஜதீபனை புளொட் பயன்படுத்திக் கொண்டது.
ஜெயசேரத்தை தமிழரசுக் கட்சி சார்பில் வட மாகாண சபை உறுப்பினராக நியமித்த போது புளொட்டுக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டது. ஏனென்றால் சுழற்சி முறை பதவி தமக்கே தரப்பட வேண்டும் என்று சம்பந்தனுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
அதை ஊடகங்களுக்கும் அவர் வெளியிட்டார். ஆனால் தமிழரசுக் கட்சிக்கே போனஸ் ஆசனம் இம்முறை வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே இணங்கிக் கொள்ளப்பட்ட முடிவு தான் என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஒரு கடிதத்தை சம்பந்தனுக்கு எழுதியிருந்தார்.
அதை அவரும் ஊடகங்களுக்கு அனுப்பினார். புளொட் அதற்குப் பதில் ஏதும் தராமலேயே ஒதுங்கிக் கொண்டது. எனினும் முன்னைய கடிதத்தில் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுகிறது என்று சித்தார்த்தன் கூறியிருந்தார்.
ஏற்கனவே இதே குற்றச்சாட்டை தொடர்ச்சியாக ஈபிஆர்எல்எவ்வும் கூறி வந்தது. வவுனியா கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அதிகாரபூர்வமாக யாரும் கருத்து வெளியிடாவிடினும் தமிழரசுக் கட்சிக்கு கடிவாளம் போடுவது அல்லது ஓரம் கட்டுவதே அதன் அடிப்படை நோக்கமாக இருந்தது.
தமிழரசுக் கட்சியை ஓரம் கட்டி விட்டு மூன்று கட்சிகளும் தனித்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்ற பேச்சும் உள்ளது. தேர்தல் வரும் போது வேறு கட்சிகளையும் இணைத்து போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே ஈபிஆர்எல்எவ்வுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், இனிமேல் தீர்க்கப்பட முடியாத கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது போலவே தெரிகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஏற்பட்ட தோல்வி அவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதற்கு முழுக் காரணம் தமிழரசுக் கட்சி தான் என வலுவாக நம்புகிறார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் கூட மாவை சேனாதிராசாவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் மோதிக் கொண்டதாகவே கூறப்படுகிறது.
எலி கொழுத்தால் வளையில் தங்காது என்பது பழமொழி. இது இரண்டு தரப்புகளுக்குமே பொருத்தமானது தான். ஒரு காலத்தில் தமிழரசுக் கட்சியை முன்னிறுத்தியே தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏனைய கட்சிகளுக்குக் காணப்பட்டது.
ஆயுதக் குழுக்களாக செயற்பட்டதால் தமிழ் மக்களின் வெறுப்பை இந்தக் கட்சிகள் சம்பாதித்திருந்தன. அதனால் தமிழரசுக் கட்சியின் தயவு அவர்களுக்குத் தேவைப்பட்டது.
இப்போதும் கூட இந்தக் கட்சிகளுக்கு வெளியே இருந்து தான் ஒரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கலாம் என்ற நினைப்பில் இந்தக் கட்சிகள் இருப்பதாகத் தெரிகிறது.
இதனால் தமிழரசுக் கட்சியை கழற்றி விட்டுச் செல்ல முனைகின்றன. தமிழரசுக் கட்சியும் கூட இதே போக்கில் தான் செயற்பட்டது என்பதை மறுக்க முடியாது. உள்ளூராட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை தமிழரசுக் கட்சி முன்னெடுத்திருந்தது.
அத்துடன் பங்காளிக் கட்சிகளை ஓரம் கட்டும் உத்தயையும் தொடர்ச்சியாக கையாண்டு வந்தது. இப்போது முதலமைச்சரை முன்னிறுத்தி அடுத்த தேர்தலை எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கை வந்ததும் தமிழரசுக் கட்சியை விட்டு ஒதுங்குவதற்கு ஏனைய கட்சிகள் முனைவதாகவே தோன்றுகிறது.
வட மாகாண அமைச்சரவையில் இருந்து தமிழரசுக் கட்சி ஒதுங்கிக் கொள்ள எடுத்திருக்கின்ற முடிவு கூட கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசலைத் தான் காட்டியிருக்கிறது. விரைவில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ள சூழலில் பிரச்சினைகளை வளர்க்காமல் நல்ல பெயர் எடுக்கப் பார்க்கிறது தமிழரசுக் கட்சி.
இது எந்தளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது.
பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி வட மாகாண அமைச்சர்கள் நியமனம் குறித்து முடிவெடுக்கலாம் என்று சம்பந்தனும் விக்னேஸ்வரனும் எடுத்த முடிவு புதிய பேச்சுக்களுக்கும் ஒற்றுமையான நடவடிக்கைகளுக்கும் வித்திடும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் இன்னொரு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகமே இப்போது எ’ழுந்திருக்கிறது.
மீண்டும் உச்சமடையும் கூட்டமைப்புக் குழப்பம்!
Reviewed by Author
on
August 14, 2017
Rating:

No comments:
Post a Comment