விவேகம்.......திரைவிமர்சனம்.......
- நடிகர் அஜித்குமார்
- நடிகை காஜல் அகர்வால்
- இயக்குனர் சிவா
- இசை அனிருத் ரவிச்சந்தர்
- ஓளிப்பதிவு வெற்றி
இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.
அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.
அக்ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும். இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்ஷராவை கண்டுபிடிக்கிறது. மேலும் அக்ஷராவிடம் அஜித் ரகசிய விசாரணை ஒன்றை நடத்துகிறார். அதில் அக்ஷரா அந்த ஆயுதத்தை வெடிக்க வைக்கவில்லை என்பதும், அக்ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்பதும் தெரிய வருகிறது. சிலரின் தூண்டுதலால், தான் அக்ஷரா அந்த ஆயுதத்தை ஹேக் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தனக்கு பின்னால் தான் தெரிய வந்தது என்றும் அக்ஷரா கூறுகிறார்.
இந்நிலையில், அக்ஷராவை கொல்ல வேண்டும் என்றும், அந்த ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் விவேக் ஓபராய் கூற, அவரது யோசனைக்கு அஜித் மறுப்பு தெரிவித்து அவளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போது, விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சுட்டுவிட்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.
அதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். ஒரு மலைப்பகுதியில் நடக்கும் இந்த சண்டையில் குண்டு காயம் பட்ட அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலயில் உயிருடன் திரும்ப வரும் அஜித் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களை எப்படி பழிவாங்குகிறார்? தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார்? உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர்? அவர்களால் வரும் பிரச்சனைகளை அஜித் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
தனது 25-வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் தீனி போடும் படமாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இராணுவ அதிகாரிக்கு உரிய தோரணையிலும், அதற்குண்டான தனித்தன்மையை வெளிப்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி வியக்க வைக்குப்படி நடித்திருக்கிறார். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்திற்கும் விசில் பறக்கிறது. ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்குண்டான ஸ்டைலில் அஜித் ராணுவ உடை, சாதாரண உடை, மண், புழுதி என அழுக்குப் படிந்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது.
காஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
விவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் மாறி ரசிக்க வைக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார். அந்த கனீர் குரலில் அவர் பேசும் வசனங்கள் கேட்பதற்கு ரசிக்கும்படி இருக்கிறது.
ஒரு ஹேக்கராக அக்ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்ஷராவின் முதல் காட்சி ரசிக்கும்படி இருந்தது. அதேபோல் கருணாகரன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரு படங்களை கொடுத்த சிவா, முற்றிலும் மாறுபட்டு ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்தை மாஸாக காட்டியிருக்கிறார். முதல் பாகத்தில் பட்டாசு சத்தம் போல துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்க, அடுத்த பாதியில் அஜித்தின் மாஸ் காட்சிகள் அதிகளவில் காட்டப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அஜித்தை எல்லா லுக்கிலும் அழகாக காட்டியிருப்பது சிறப்பு. வெற்றி, தோல்வி குறித்து அஜித் பேசும் வசனங்கள் உட்பட படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. இது அஜித்தின் லுக்காக பார்க்க வேண்டிய படம். அதேபோல் விவேக் ஓபராய், அக்ஷரா கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஒரு முழு அதிரடி படத்திலும் தனக்கே உரிய ஸ்டைலில் செண்டிமென்ட் காட்சிகளையும் வைத்திருப்பது சிவாவின் சிறப்பு. விவேகம் என்ற தலைப்புக்கு ஏற்ப படம் அதிவேகமாக இருக்கிறது.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதும் படத்திற்கு பலம்.
மொத்தத்தில் `விவேகம்' அதிவேகம்.
விவேகம்.......திரைவிமர்சனம்.......
 Reviewed by Author
        on 
        
August 26, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 26, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
August 26, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 26, 2017
 
        Rating: 


 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment