இலங்கை தொடர்பாக நெதர்லாந்தில் வெளியான திடுக்கிடும் தகவல்....ஆவணப் படம்.
1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் குழந்தைகளின் பண்ணையாக இலங்கை விளங்கிதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. நெதர்லாந்தில் வெளியான ஆவணப் படம் ஒன்றின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாய்ப் பிறந்த தனது குழந்தையை இரண்டாயிரம் ரூபாவிற்கு விற்ற இலங்கைத் தாயொருவர், அந்தக் குழந்தையை ஒரேயொரு முறை தன் கண்ணாரக் காண வேண்டும் என்றும், அதைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்றும் அந்தப் படத்தில் கண்ணீருடன் கூறியிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 11,000இற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐரோப்பிய நாட்டுத் தம்பதியினருக்குக் விற்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் குழந்தைகளில் சுமார் 4,000 குழந்தைகள் நெதர்லாந்திலும் ஏனைய குழந்தைகள் ஸ்வீடன், டென்மார்க், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும் வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.
குறித்த ஆவணப்படம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அக்காலகட்டத்தில் இலங்கையில் குழந்தைகள் பண்ணைகள் இயங்கியமை உண்மைதான் என்று ஒத்துக்கொண்டுள்ளதுடன், குழந்தைகள் தத்துக் கொடுப்பதை ஒரு வியாபாரமாக நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக, மரபணு தகவல் திரட்டு ஒன்றைத் தயாரிப்பதாகவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் என இரு தரப்பினருமே தவறான தகவல்களை அளித்திருப்பதால், குழந்தைகளின் உண்மையான பெற்றோரைக் கண்டறிவதில் கடும் சிரமம் இருப்பதாகவும் அந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், இதுபோன்ற குழந்தைகள் பண்ணை ஒன்று முற்றுகையிடப்பட்டு இருபது குழந்தைகள் காப்பாற்றப்பட்டதையடுத்து, 1987ஆம் ஆண்டு, இலங்கையில் பிறக்கும் குழந்தைகளை வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுப்பது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது.
இவ்வாறான பண்ணைகளில், கர்ப்பிணிப் பெண்கள் சிறைச்சாலைகளுக்கு நிகரான பத்துக்குப் பத்து என்ற இடப்பரப்புக் கொண்ட அறைகளில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை தொடர்பாக நெதர்லாந்தில் வெளியான திடுக்கிடும் தகவல்....ஆவணப் படம்.
Reviewed by Author
on
September 23, 2017
Rating:

No comments:
Post a Comment