கத்தார் நாட்டில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவர்கள் 5 பேரை அபுதாபி கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அரபு நாடுகளில் ஏராளமான குமரி மீனவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் அபுதாபி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்கள் ரீகன் (வயது 31), சாரோள் ஜிகின் (26), ரீகன் ஜியோ (35), பிரபாகர் (40) மற்றும் மிடாலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (32) ஆகியோர் கத்தார் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கியிருந்து மீன்பிடித்து வந்தனர்.
அவர்கள் கடந்த 25-ந்தேதி விசைப்படகில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி கடற்படையினர் குமரி மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறை வைத்தனர்.
குமரி மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் கத்தாரில் உள்ள மற்ற குமரி மீனவர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுபற்றி குமரி மாவட்டத்தில் உள்ள அந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அந்த 5 மீனவர்களின் குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கினார்கள். மேலும் அவர்கள் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பாதிரியார் சர்ச்சில் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.
அவர்கள் கலெக்டரை சந்தித்து குமரி மீனவர்கள் 5 பேரையும் உடனே விடுவிக்க மத்திய அரசு மூலம் அபுதாபி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி மனு கொடுத்தனர். கலெக்டரும் அதற்கு உடனே நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
கத்தார் நாட்டில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் கைது
Reviewed by Author
on
September 08, 2017
Rating:

No comments:
Post a Comment