மன்னார் பொலிஸாருக்கு எதிராக மன்னாரின் பிரபல வர்த்தகர் ஒருவர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு-(படம்)

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கடல் உணவு பொருட்களை கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகரான வெற்றிவேல் தயானந்தன் (வயது-40) என்ற குடும்பஸ்தரே வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து தான் வசித்து வருவதாகவும், கடல் உணவு பொருட்களை கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக தனது சுய கௌரவத்தை உதாசீனம் செய்யும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி (17-09-2017)ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 10 இற்கும் மேற்பட்ட பொலிஸார் மோப்ப நாய் ஒன்றை கொண்டு வந்து எனது வீட்டை முழுமையாக சேதனையிட்டனர்.எனது வீட்டில் சட்ட விரோதமான பொருட்கள் உள்ளதாக கூறியே குறித்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,எனது குடும்பத்திற்கு ஆதரவாக அருட்தந்தை ஒருவர் வீட்டிற்கு வந்து இறுதி நேரம் வரை காத்திருந்தார்.
எனினும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் எவ்விதமான சந்தேக பொருட்களையும் கைப்பற்றவில்லை.
இறுதியாக தவறான தகவல் என கூறிய மன்னார் பொலிஸார் நடந்தவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்து விட்டுச் சென்றனர்.
குறித்த சம்பவத்தினால் எனது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
குறித்த கிராமத்தில் மக்கள் மத்தியில் கௌரவமாக வாழ்ந்து வரும் எனது குடும்பத்தின் கௌரவத்தை சீர் குழைக்கும் வகையில் பொலிஸாரின் செயற்பாடு அமைந்துள்ளது.
இதே போன்று கடந்த 27-03-2012 அன்று காலை 7.35 மணியளவில் எனது வீட்டிற்கு வந்த சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் எனது வீட்டை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டு விட்டு தவறான தகவல் என கூறிச் சென்றுள்ளனர்.
தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற இவ் சம்பவங்கள் எனது நற்பெயருக்கும் சுய கௌரவத்திற்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதோடு,எனது கிராம மக்கள் மத்தியில் சந்தேக பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே கடந்த 17 ஆம் திகதி (17-09-2017) ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் எனது வீட்டிற்கு வந்து சோதனைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விளக்கத்தினை வழங்க வேண்டும் எனவும், தவறான இரகசியத்தகவழினை வழங்கிய குறித்த நபருக்கு எதிராக உரிய சட் நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான இரகசிய தககல் தொடர்பில் உரிய விசாரனைகளை மேற்கொண்டு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸாருக்கு எதிராக மன்னாரின் பிரபல வர்த்தகர் ஒருவர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
September 20, 2017
Rating:

No comments:
Post a Comment