மன்னாரில் 11 இடங்களிலும்,வடக்கில் 48 இடங்களிலும்.....மலேரியா வகை நுளம்புகள்.
வடக்கில் மலேரியா வகை நுளம்புகள் 48 இடங்களில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றை அழிப்பதற்கான இரசாயன மருந்துகள் உடனடியாக வழங்கப்படும் என்று கொழும்பு சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரத்துக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் சரத் அமுனுகம, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் மலேரியா நோயைப் பரப்பும் நுளம்புகள் வடக்கில் மீண்டும் இனங்காணப்பட்டிருக்கின்றன.அவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் நேற்றுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மலேரியாவைப் பரப்பும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் யாழ்ப்பாணத்தில் 33 இடங்களிலும் , மன்னாரில் 11 இடங்களிலும், வவுனியாவில் 4 இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன என்று கூட்டத்தில் கூறப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த டிசெம்பர் மாதம் இனங்காணப்பட்ட இந்த வகையான நுளம்புகளை அழிக்க இரு கட்டமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பெறுபேறுகள் தொடர்பிலும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் முதலில் 79 இடங்களில் மலேரியா நுளம்புகள் இனங்காணப்பட்டிருந்தன. தற்போது 11 இடங்களில் அவை மீண்டும் இனங்காணப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. மாகாணத்தின் மலேரியாக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், மூன்று மாவட்டங்களின் சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மன்னாரில் 11 இடங்களிலும்,வடக்கில் 48 இடங்களிலும்.....மலேரியா வகை நுளம்புகள்.
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment