இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்! விக்கியிடம் குறிப்பிட்ட மைத்திரி
"கடந்த அரசாங்கத்தின் காலத்திலும், அதற்குப் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, இன்று வரை விடுதலை செய்யப்படாமல் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனினும் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் சரியான பதிலை வழங்கவில்லை. அரச தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்கினாலும், இன்றளவிலும் அவர்கள் சிறையில் விசாரணை இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறைக்குள் கைதிகளும், சிறைக்கு வெளியில் உறவுகளும் போராடியும் விடுதலை இன்று வரை சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.பொது மேடைகளில் பேசும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் முயற்சிகள் செய்வதாகவும், விடுதலை செய்வது குறித்து ஆராய்வதாகவும் குறிப்பிடுகிறார். ஆனால் அவரின் வாக்குறுதிகள் பல தடவைகள் பொய்த்துப் போயிருக்கின்றன.
இந்நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பிக்கின்றார்.அவருக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் கோலாகலமான வரவேற்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து குறித்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.இது குறித்து விக்னேஸ்வரன் குறிப்பிட்ட தகவல்களின்படி,
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். தமிழ் அரசியல் கைதிகளை நான் விடுதலை செய்தால், உடனே தெற்கில் இருக்கும் அரசியல் தலைவர்களும், அரசாங்கத்திற்கு எதிரானவர்களும், எதிர்த்து பேசுவார்கள்.
தெற்கில் இருக்கும் சிங்களவர்களை சிறைக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் அரசாங்கம், தமிழர்களை மெதுமெதுவாக வெளியே விடுகிறார்கள் என என்னை கடுமையாக தூற்றுவார்கள்.
எனவே இப்பொழுது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்பது இப்பொழுது முடியாத காரியம் என்ற தொணியில் நான் கோரியதற்கு பதில் வழங்கியிருக்கிறார் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்கள் நீண்ட காலமாக அரசியல் கைதிகள் குறித்து ஜனாதிபதி நல்லதொரு பதிலை தருவார் என எண்ணியிருக்கையில், கைவிரிக்கும் பாணியில் அவரின் பதில் அமைந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் இன்றைய தினம் மைத்திரி யாழ்ப்பாணத்தில் கால் பதித்திருக்கிறார்கள். யாழில் வைத்து அவரின் கருத்துக்கள் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்! விக்கியிடம் குறிப்பிட்ட மைத்திரி
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment