தமிழர் தேசம் என்பதால் அடிப்படை வசதிகள்கூட இல்லை! சிறீதரன் எம்.பி
கிளிநொச்சி - பூநகரிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலைப்பாடு, கிராஞ்சி, பாலாவி போன்ற கிராமங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாது வாழ்ந்து வருகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த அரசு மக்களுக்கான அரசா? அல்லது மக்கள் நலன்களைப் புறந்தள்ளி மக்கள் துன்பத்தில் சுகபோகம் அனுபவிக்கும் அரசா? என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி பகுதிகளுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அவர், இந்த பகுதி மக்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட வலைப்பாடு, கிராஞ்சி, பாலாவி போன்ற கிராமங்கள் இலங்கை அரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில்தான் இருக்கின்றதா என எண்ண தோன்றுகின்றது.
குறித்த பகுதியில் போக்குவரத்துச் செய்யும் பிரதான வீதி நீண்டகாலமாகத் திருத்தியமைக்கப்படாத நிலையில், சேதமடைந்து காணப்படுவதுடன், இது மக்கள் போக்குவரத்துச் செய்யும் வீதிதானா? ளவுக்கு மிகமோசமாகக் காணப்படுகின்றது. மழை காலங்களில் கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி போன்ற பகுதிகள் நிலத்தொடர்பற்ற தீவு போலக் காட்சியளிக்கின்றது. மழை காலங்களில் இவ்வீதியால் போக்குவரத்துச் செய்யும் நிலையை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை என்றால், காலங்காலமாக அவலங்களை அனுபவிப்பவர்களுக்கு எப்படியிருக்கும்?
இப்பகுதிக்கான வீதிகளை விரைவாகத் திருத்தியமைக்குமாறு நாடாளுமன்றத்தில் நேரடியாகவும், கடித மூலமாகவும் உரிய பொறுப்புவாய்ந்தவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட, பிரதேச அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் போதும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
எனினும், பொறுப்பு வாய்ந்தவர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்பட்டு காலங்கடத்தப்பட்டு வருகின்றதே தவிர, இவ்வீதியைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் எவையுமே இதுவரை இடம்பெறவில்லை. இந்நாட்டின் அரசு மக்களுக்கான அரசா? அல்லது மக்கள் நலன்களைப் புறந்தள்ளி மக்கள் துன்பத்தில் சுகபோகம் அனுபவிக்கும் அரசா? என்ற கேள்வி எழுகின்றது. தமிழர் தாயகப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில், அபிவிருத்தியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி - பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காணப்படும் கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி போன்ற கிராமங்கள், தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்ந்த தமிழர் தேசமாகக் காணப்படுகின்றன.
தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யாது மக்களை அவலத்திற்குள்ளாக்குவதன் மூலம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டு குடிபெயர்ந்து செல்ல வைப்பதும் ஏதிலிகளாக அலைய வைப்பதும், இறுதியில் தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிப்பது போன்ற நீண்ட காலத் திட்டங்கள் இதற்குள் மறைந்துள்ளன. நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளற்ற வகையில் அவலப்படுவதை உரிய பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் என அனைவருக்கும் நேரடியாகவும் கடித மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் இத்தனை வருடங்களாகிவிட்ட நிலையிலும் இப்பகுதிகளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருக்கின்றார்கள் என்பதிலிருந்தே இவர்களது மறைமுகத் திட்டங்கள் வெளிப்படுகின்றன.
தமிழர் தாயகப்பகுதிகள் அபிவிருத்தியில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் செயற்பாடுகளுக்கு இங்குள்ள பொறுப்புவாய்ந்தவர்கள் சிலரது பொறுப்பற்ற செயல்களும் துணைபுரியவதாகவே அமைந்து காணப்படுகின்றன. எமது பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக உங்களுடன் இணைந்து நாம் எம்மாலான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குத் தயாராகவே உள்ளோம். பூநாகரிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இப்பகுதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் இங்குள்ள மக்களும் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் போன்று வாழவேண்டும் என்பதில் நாம் உறுதியோடு செயற்பட்டு வருகின்றோம் என்றார்.
தமிழர் தேசம் என்பதால் அடிப்படை வசதிகள்கூட இல்லை! சிறீதரன் எம்.பி
Reviewed by Author
on
October 07, 2017
Rating:
Reviewed by Author
on
October 07, 2017
Rating:


No comments:
Post a Comment