ஜெனீவா: சுதந்திர தமிழ் ஈழத்துக்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும் - வைகோ வேண்டுகோள்
‘சுதந்திர தமிழ் ஈழத்துக்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும்’ என்று ஜெனீவா கூட்ட நிறைவின்போது, மனித உரிமை கவுன்சிலுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. முன்னதாக கவுன்சில் கூட்டத்தை விட்டு வெளியேறிய வைகோ, தனக்கு பாதுகாப்பு வழங்கிய மனித உரிமைகள் கவுன்சில் பாதுகாவலர்களுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று காலை ஐ.நா. மன்றம் முன்புள்ள முருகதாசன் திடலில் அமைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை புகைப்பட கண்காட்சியை நிறைவு செய்தார்.
நேற்று முன்தினம் மனித உரிமைகள் கவுன்சில் தலைவர், துணைத்தலைவர்கள், மனித உரிமைகள் கமிஷனர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
ஐ.நா.வின் ஜெனீவா ஒப்பந்தம் தடை செய்த குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் மட்டும் அல்லாது, ஆயுதம் ஏந்தாத ஈழத்தமிழர்களை உதவிகளோடு கொன்று குவித்தது. இந்த இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே, மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்ட அனைவரும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டும். இனப்படுகொலையை மனித உரிமைகள் கவுன்சில், ஐ.நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இனி சிங்களர்களோடு ஈழத்தமிழர்களுக்கு சக வாழ்வு சாத்தியம் இல்லை என்பதால், ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அறிவிப்பதோடு, சுதந்திர தமிழ் ஈழத்துக்கு ஐ.நா. வின் மேற்பார்வையில் ஈழத்தமிழர் தாயகத்திலும், உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடமும், பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதுதான் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி அமைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஜெனீவா: சுதந்திர தமிழ் ஈழத்துக்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும் - வைகோ வேண்டுகோள்
Reviewed by Author
on
October 01, 2017
Rating:
Reviewed by Author
on
October 01, 2017
Rating:


No comments:
Post a Comment