தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: ஆளுநரிடம் புகார் அளித்தார் விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனு அளித்தார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பிரச்சனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் அழைப்பு விடுக்கப்படாததால் அந்த விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. சிவாஜியும், கமலும் திரைப்படங்களில் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததை பார்க்கிறேன். இருவரும் இணைந்து நன்றாக நடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், அரசியலுக்கு வந்துவிட்ட என்னைப் பற்றி ரஜினி மற்றும் கமலிடம் கேளுங்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: ஆளுநரிடம் புகார் அளித்தார் விஜயகாந்த்
Reviewed by Author
on
October 08, 2017
Rating:

No comments:
Post a Comment