தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை எமது தலைவர்கள் பலர் இழந்து விட்டனர்- முன்னாள் வன்னி எம்.பி.எஸ்.வினோ-(படம்)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது இரண்டும் இணைந்த தற்போதைய கூட்டரசாங்கமோ தமிழ் மக்கள் ஏற்றக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றினை தந்துவிடப்போவதில்லை என்பதை முன்பள்ளிகளின் சிறார்களிடம் கேட்டாலே சொல்லி விடுவார்கள். தெற்கின் அரசியல் நிலைமை இதைத்தான் சொல்லி நிற்கின்றது என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, விசுவமடு பிரதேசங்களில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
-அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,
உடையார்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் திறன் வகுப்பறை கட்டிடத்தையும், விசுவமடுவில் இலவச கணினி பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்து உறையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது தெற்கிலே என்றுமில்லாதவாறு அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது.
ஒருவர் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசப்பட வேண்டும் என்கிறார். இன்னுமொருவர் இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டத்தை ஆதரிப்பவர்களை சுட்டக்கொல்ல வேண்டும் என்கிறார். இவர்களது கொலைவெறி இன்னமும் அடங்கவில்லை. இவர்கள்தான் வன்னியில் எமது மக்களை கூட்டாக படுகொலை செய்தவர்கள்.
வன்னியின் அவலத்துக்கு காரணமானவர்கள். இது இனவாதத்தின் உச்சநிலையை காட்டுகிறது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் முன்மொழியப்பட்ட இடைக்கால தீர்வுத்திட்டம் மூலம் நிறைவேற்றப்படுமா என்பதில் நாம் இன்னமும் நம்பிக்கையீனத்துடனேயே இருக்கின்றோம்.
இறுதியான வரைபு திட்டத்தை அறியாமல் எம்மில் சிலர் ஆதரிக்கவேண்டும் என்கின்றனர், சிலர் ஆதரிக்க கூடாது என்கின்றனர். இடைக்கால அறிக்கையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற தலைவர்கள் எதிர்க்க சொல்லி கேட்கிறார்கள்.
கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ ஒருமித்து ஒரு நிலைப்பாடு எடுக்க முடியாதவர்களாக எமது தலைவர்கள் இருக்கின்றனர்.
இணைந்த வடக்கு கிழக்கில், சமஸ்டித் தீர்வைத் தவிர வேறெந்த தீர்வையும் ஏற்கப்போவதில்லை என கடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் விஞ்ஞாபனங்களாகவும், வீரப் பேச்சுக்களாகவும் மேடையேறி முழங்கிவிட்டு அந்த நிலைப்பாட்டிலிருந்து நமது தலைவர்கள் எவருமே தப்பிக் கொள்ள முடியாது.
போராளிகளினதும், பொதுமக்களினதும் தியாகங்களுக்கும், இழப்புக்களுக்கும் துரோகம் செய்துவிட முடியாது.
அப்படியாயின் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்களின்போது சமஸ்டி தீர்வையும், வடகிழக்கு இணைப்பையும் கைவிட்டு விட்டோம் என பகிரங்கமாக சொல்லி மக்களிடமே மீண்டும் ஆணையை பெற வேண்டும் அல்லது கொள்கையில் உறுதிப்பாட்டுடன் மக்களிடம் செல்லவேண்டும். தலைவர்கள் என சொல்லிக்கொள்வோர் தமக்குள்ளேயே ஒன்றுபட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை அனைவருமே தோல்வி கண்ட தலைவர்களாகவே மக்களால்
நோக்கப்படுகின்றனர்.
அவர்களிடம் ஒற்றுமையாக நிற்கும் எண்ணம் இல்லை. தீர்வு வருமா இல்லையா என்பது ஒரு புறமிருந்தாலும் இந்தச் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்துவிடப்போவதில்லை.
இந்த இறுதி முயற்சியிலும் எமது தலைவர்கள் தோற்றுப்போனால் அடுத்த கட்ட தலைவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து ஒதுங்கிருப்பதே மேலானது, தலைவர்கள் எனப்படுவோர் தங்கள் அனுபவங்களையும், அறிவையும் ஆற்றலையும் புதிய தலைவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியாத தலைவர்கள் என்பதனை அவர்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தலைமை தாங்கும் தார்மீக பொறுப்பு தங்களிடம் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை எமது தலைவர்கள் பலர் இழந்து விட்டனர்- முன்னாள் வன்னி எம்.பி.எஸ்.வினோ-(படம்)
Reviewed by NEWMANNAR
on
November 03, 2017
Rating:

No comments:
Post a Comment